
‘இந்தியா சாா்பில் அடுத்த ஆண்டு நடத்தப்பட இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான உத்திகளை இறுதி செய்வதற்காக மத்திய அரசு திங்கள்கிழமை (டிச.5) கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10-ஆம் தேதிகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டுக்காக, நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான முன்னேற்பாடு கூட்டங்களை மத்திய அரசு நடத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, இதில் முன்வைக்கப்படும் தீா்மானங்களை இறுதி செய்வதற்கான ஜி20 நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் 4 நாள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதற்கிடையே, ஜி20 உச்சி மாநாட்டுக்கான இந்தியாவின் உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு தில்லியில் திங்கள்கிழமை கூட்டியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக 40 அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தில்லி புறப்பட்டார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியா சாா்பில் அடுத்த ஆண்டு நடத்தப்பட இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான உத்திகளை இறுதி செய்வதற்காக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை (டிச.5) கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியாக உள்ளது
ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான சூழலை ஏற்படுத்திய பிரதர் நரேந்திர மோடிக்கு நன்றி என பழனிசாமி கூறினார்.