
மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கிவரும் நிலையில் நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்று இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் நகரும் வேகமானது மணிக்கு 6 கி.மீட்டராக குறைந்துள்ளது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு – தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 620 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில், 9-ம் தேதி நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை(டிச.9) அதி கனமழை பெய்யும் நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 10-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலியால் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையை நெருங்கிவரும் மாண்டஸ் புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், புயல் காரணமாக வட மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.