இந்தியாவில் கொரோனா வைரஸ் முடிந்து விடவில்லை..

Published:

images 36 - 2026

சீனாவை மிரட்டி வரும் ஓமிக்ரான் பிஎப்.7 எனும் புது வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்துள்ளது. குஜராத்தில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் புதிய வகை தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்று கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவில் கடந்த 2020ல் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பலி கொண்டது. இந்தியாவில் 3 அலைகளுக்குப் பிறகு தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, சீனாவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.

சமீபத்தில் சீன அரசின் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்நாட்டு மக்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினர். இதன் காரணமாக ‘பூஜ்ய கொரோனா கொள்கையை சீன அரசு தளர்த்திக் கொண்டதைத் தொடர்ந்து, அங்கு தொற்று பரவல் அதிதீவிரமடைந்துள்ளது. இந்த திடீர் எழுச்சிக்கு, ஓமிக்ரான் வைரஸ் பிஏ.5 இன் துணை வகையான பிஎப்.7 எனும் புதிய மாறுபாடு காரணம் என சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

குறிப்பாக, தலைநகர் பீஜிங்கில் பிஎப்.7 வகை வைரசால் தொற்று பரவல் மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மரணங்கள் குறித்த விவரங்களை சீனா மறைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்நிலையில், சீனாவை மிரட்டி வரும் பிஎப்.7 வகை மாறுபாடு இந்தியாவிலும் புகுந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் நேற்று வெளியானது.

குஜராத்தில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் பிஎப்.7 வகை மாறுபாடு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக குஜராத் மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், ‘கடந்த அக்டோபரில் முதல் தொற்று உறுதியானது. மற்றொருவருக்கு அக்டோபர்-நவம்பரில் கண்டறியப்பட்டது. அந்த நோயாளிகள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து குணமடைந்தனர்’ என கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், பிஎப்.7 வகை வைரஸ் அதிகளவில் பரவக்கூடியது மற்றும் தடுப்பூசி போட்டவர்களையும் தொற்றக் கூடியது அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் அதிக திறன் கொண்ட வலுவான திறனை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதால், இது மீண்டும் கொரோனா பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனா மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக, இந்தியாவில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் சளி மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி மரபணு வகைப்படுத்துதல் மூலம் புதிய வகை மாறுபாடுகளை கண்டறியவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இதைத் தொடர்ந்து, டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால், ‘‘இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு இல்லை என்றாலும் தற்போதுள்ள, அதிகரித்து வரும் மாறுபாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

நாட்டில் தகுதியான மக்களில் 28 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர். அதே சமயம் மக்கள் பீதி அடைய தேவையில்லை’’ என வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘‘இன்னும் கொரோனா வைரஸ் முடிந்து விடவில்லை.

அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெரிசலான பகுதிகளில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.தொற்று பரவல் நிலைமையை கண்காணிக்க அடுத்த வாரம் மீண்டும் ஆய்வுக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img