
சாத்தூர் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதி இருவர் பலியான சம்பவத்தில் தப்பி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்து ஒட்டுனரை இன்று சாத்தூர் தாலுகா போலீஸார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி(40),ஜெயராஜ்(35),சங்கரன்(45) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த புதன்கிழமை அதிகாலை திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர்.அப்போது புல்வாய்பட்டி சந்திப்பில் நான்குவழிச்சாலையில் திருநெல்வேலி நோக்கி சென்ற வாகனம் மோதி கருப்பசாமி,சங்கரன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வந்தனர்.இந்நிலையில் விபத்து நடந்த தேசியநெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் ஆய்வு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் கரூரில் இயங்கிவரும் தனியார் கூரியர் நிறுவன வாகனம் என்பதும்,இந்த வாகனத்தை வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த முகேஸ்வரன்(26) என்பவர் வாகனத்தை ஒட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து கரூர் சென்ற தாலுகா போலீஸார் வாகனத்தின் முகப்பு விளக்கு மற்றும் முன்பக்க கண்ணாடி உடைந்திருந்ததை பார்த்து விபத்து ஏற்படுத்தியதை உறுதி செய்துள்ளனர்.மேலும் வாகன ஒட்டுனரான முகேஸ்வரனை சனிகிழமை கைது செய்ததுடன் வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.