மதுரை பாலமேடு திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் ராஜன் என்ற இளைஞர் பலியானார்.மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் மதுரையைச் சேர்ந்த அரவிந்த் ராஜன் என்பவர் மாடு பிடிக்கும் போட்டியில் களமிறங்கினார். இவர் ஆடுகளத்தில் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்பட்டதோடு 9 காளைகளை பிடித்து 3-வது இடத்தில் இருந்தார்.
இந்த நிலையில் பாய்ந்து வந்த காளை ஒன்றை மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் அடக்க பாய்ந்தார். அப்போது அவரது மார்பு பகுதியில் மாட்டின் கொம்பு குத்திக் கிழித்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அரவிந்த்ராஜன் உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அரவிந்த் ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். ஜல்லிக்கட்டுப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை பாலமேடு கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் – தெய்வானை தம்பதிக்கு இரண்டு மகன்கள். இவர்களின் முதல் மகன் நரேந்திர ராஜ், சென்னையில் தந்தை ராஜேந்திரனுடன் கட்டட வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது மகனான அரவிந்தராஜ் (24) ஜல்லிக்கட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பீரோ, ஹெல்மெட், தங்கக்காசு உள்ளிட்ட பல பரிசுகளை வெற்றி பெற்றுள்ளார்.இந்நிலையில் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று முதல் 3 சுற்றில் அரவிந்த் ராஜ் 9 காளைகளை அடக்கி, மூன்றாவது சிறந்த வீரராக களம் ஆடிக் கொண்டிருந்தார்.நான்காவது சுற்றில் ஜல்லிக்கட்டு காளையைப் அடக்க முயன்ற போது மாடு வயிற்றில் ஆழமாக குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண வந்தவர் காளை முட்டியதில் பலி 4 பேர் காயம்..
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண வந்த இளைஞர் காளை முட்டியதில் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (29) என்ற இளைஞரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண வந்திருந்தார். வாடிவாசலை விட்டு வெளியே வந்த காளை ஒன்று மாடு பிடி களத்தை கடந்து வெளியே ஓடி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அரவிந்தை அந்தக் காளை முட்டி கீழே தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதே போல மற்றொரு மாடு வேகமாக ஓடி வந்ததைக் கண்ட இளைஞர்கள் சிலர் காளையிடம் சிக்காமல் தப்புவதற்காக ஓடினர். இதில் தவறி விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்தனர்.