15 நாட்களுக்கு பிறகு கவர்னரை நாளை நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார் முதலமைச்சர் குடியரசு தினவிழா நாளை காலை 8 மணிக்கு தொடங்குவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி வருவதற்கு முன்பே காலை 7.50 மணிக்கு அந்த இடத்துக்கு வந்துவிடுவார். கவர்னர் 7.55 மணிக்கு வரும்போது அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்று உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்துவார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே கவர்னர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்று விழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு குடியரசு தினவிழாவை வெகு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றபடி உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு கொடி கம்பமும் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியஸ்தர்கள் அமருவதற்காக சாலை ஓரத்தில் பந்தல்களும் போடப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை தேடிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
ராணுவப்படை, கடற்படை, ராணுவ கூட்டு குழல் முரசிசை பிரிவு, வான் படை பிரிவு அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கமாண்டோ படை பிரிவு, கடலோர பாதுகாப்பு படை ஊர்க்காவல் படை உள்பட 30-க்கும் மேற்பட்ட படை பிரிவினர் அணிவகுத்து செல்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிவகுப்பு மேடைக்கு வந்து பதக்கங்களை வழங்க இருக்கிறார். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து விழா மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச் சர் மு.க.ஸ்டாலினும் அருகருகே அமர்ந்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை கண்டு களிப்பார்கள். பல்வேறு அரசுத்துறைகளின் ஊர்திகள், அரசு நலத்திட்டங்களை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இதில் அணிவகுத்து வரும்.
இறுதியாக பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். சுமார் 30 நிமிட நேரம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளை கவர்னரும், முதலமைச்சரும் அருகருகே இருந்து பார்க்க உள்ளனர்.
குடியரசு தினவிழா நாளை காலை 8 மணிக்கு தொடங்குவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி வருவதற்கு முன்பே காலை 7.50 மணிக்கு அந்த இடத்துக்கு வந்துவிடுவார். கவர்னர் 7.55 மணிக்கு வரும்போது அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்று உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்துவார். அதன்பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி 8 மணிக்கு தேசியக்கொடி ஏற்றுவார். அப்போது கவர்னர் அருகில் முதலமைச்சர் நின்றுகொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவார். அதன்பிறகு நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் பார்வையிடுவார். பின்னர் கவர்னர் முக்கிய பிரமுகர்கள் அமரும் இடத்திற்கு சென்று அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பார். அவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருப்பார்கள். கலைநிகழ்ச்சிகள் முடியும் வரை அங்கு இருந்துவிட்டு அதன்பிறகு 9 மணி அளவில் கவர்னர் புறப்பட்டு செல்வார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி அனுப்பி வைப்பார்.
கடந்த 9-ந்தேதி சட்டசபை கூடியபோது கவர்னர் ஆர்.என்.ரவி அரசு கொடுத்த உரையை முழுமையாக படிக்காமல் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். சில வாசகங்களை சேர்த்து வாசித்தார். இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னருக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவந்து கவர்னர் வாசித்த உரையை பதிய வைக்காமல் அரசு தயாரித்த உரையை சட்டசபையில் பதிய வைத்தார். இதனால் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபை முடிவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவத்திற்கு பின்பு கவர்னரும், முதலமைச்சரும் இன்னும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவில்லை. நாளை நடைபெறும் குடியரசு தினவிழாவில் தான் இருவரும் சந்திக்க உள்ளனர். நாளைய நிகழ்ச்சியின் போது இருவரும் சகஜமாக பேசிக்கொள்வார்களா? இல்லையா என்பது தெரிந்து விடும்.