
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே டிராக்டர் மீது தனியார் சொகுசுப் பேருந்து இன்று மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர்.7பேர் படுகாயம் அடைந்தனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே சிவகாசியிலிருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
காவேரிப்பட்டிணம் அருகே எரஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது வேகமாக மோதியது.

இதில், நூலஅள்ளி அருகே சவுட்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த முத்து (20), வசந்தி (45), மல்லி (65), முனுசாமி (50), வர்ஷினி (3) ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், டிராக்ட்டரில் 12 பேர் பயணம் செய்ததாகவும், அவர்கள், ஆந்திர மாநிலம், வி.கோட்டாவில் உள்ள காற்றாலை நிறுவனத்துக்கு கூலி வேலைக்குச் சென்ற போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த தருமபுரி பகுதியை சேர்ந்த 7 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவேரிப்பட்டிணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சொகுசுப் பேருந்து ஓட்டுநர் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இச் சம்பவம் இப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




