
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.
அதிமுக வேட்பாளராக, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ச.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
238 வாக்குச்சாவடி மையங்களில், 5 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1 கட்டுப்பாட்டு கருவி, 1 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்படவுள்ளன. இந்நிலையில், இன்று ( பிப்.25) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
இறுதி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சம்பத் நகரில் காலை 9 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கி, பெரியவலசு, பாரதி தியேட்டர் சாலை, பேருந்து நிலையம், மஜித் வீதி, கருங்கல்பாளையம் காந்தி சிலை, கே.என்.கே. சாலை, மூலப்பட்டறை, பிராமண பெரிய அக்ரஹாரம், முனிசிபல் காலனி, பன்னீர் செல்வம் பூங்கா ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்து, பெரியார் நகரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியும் பெரியார் நகரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

முன்னதாக மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடையும் என கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. இதன்படி மாலை 6 மணியுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியூர்களில் இருந்து அரசியல் கட்சியினர் பலர் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்து வந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, மாலை 6 மணியோடு பிரச்சாரத்தை நிறைவு செய்து தொகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.