பாலியல் வன்கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்: ராம.கோபாலன்

Published:

rama-gopalan
சென்னை:
பாலியல் வன்கொடுமை ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
இன்று நாட்டில் பெரும் பிரச்னையாக விளங்கி வருவது பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை ஆகும். இதற்கு முதல் காரணம் மேற்கத்திய கலாச்சார பாதிப்பு. இதனால் இளைய சமுதாயத்தினர் வழி தவறி வாழ்வை இழந்து வருகின்றனர். இதற்கு தொலைக்காட்சியும், திரைப்படங்களும் துணை போகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மகாத்மா காந்திஜி அவர்கள் இந்த நாட்டில் ராம ராஜ்யம் அமைய வேண்டும் என்று கனவு கண்டார். ராம ராஜ்யத்திற்கு அவர் கொடுத்த உதாரணம்.. இளம் பெண் ஒருவர் நகைகள் அணிந்து நள்ளிரவில் தன்னந்தனியாக சாலையில் பயமின்றி செல்லும் நிலையை குறிப்பிட்டார். ஆனால் இன்று பெண்களுக்கு பாதுகாப்பில்லாதது மட்டுமல்ல, மஞ்சள் நிறத்தில் கழுத்தில் தெரிந்தால் அறுத்துக்கொண்டு ஓடும் திருட்டு எண்ணம் மலிந்துவிட்டது என்பது வருத்தத்திற்கு உரியது.
இதற்குக் காரணம் நேர்மை, ஒழுக்கச் சிந்தனை சமுதாயத்தில் குறைந்து வருவதுதான். இது களையப்பட வேண்டுமானால், மாணவர்களிடையே சமுதாய ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும். அவர்கள் இளம் வயதிலேயே அறத்தின் மீது பிடிப்பு ஏற்படுத்த நன்னெறி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
பள்ளிகளில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தலுக்கும், அத்துமீறலுக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும். கடந்த 2006ஆம் ஆண்டு சேலம் ஓமலூர் பாத்திமாக பள்ளியில் சுகன்யா என்ற மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இது போன்ற எண்ணற்ற வழக்குகள் ஏன் காலதாமதப்படுத்தப்படுகிறது? என்ற கேள்வி மட்டுமல்ல, அரசு, அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் நடக்கும் அத்துமீறலுக்கு எந்த தீர்வும் இல்லையோ என்ற நிலை நீடிப்பது நல்லதல்ல. சட்டம் மற்றவர்களுக்குத்தான் தனக்கு இல்லை என்ற நிலையை அரசு எடுப்பது மக்கள் விரோதமானது. எதனை தனியார் பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்திரவு போடுகிறதோ அதனை முதலில் அரசு தனக்குக் கீழ் இருக்கும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி முன் உதாரணமாக திகழ வேண்டும்.
பாலியல் கொடுமைக்கு மிகப்பெரிய காரணமாக இருப்பது மதுவாகும். இதனையும் அரசு கவனத்தில் கொண்டு மதுவை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக் குடிப்பதை ஊக்கப்படுத்தும் காட்சிகள் தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் காட்ட தடைவிதிக்க வேண்டும். இன்று கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்களும் குடிக்கு அடிமையாவதை காணும்போது தமிழகத்தை பற்றி யார் கவலைப்படுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது..
அரசுக்கு வருமானம் முக்கியம்தான், ஆனால் வருமானத்திற்காக நாம் எதையெல்லாம் இழந்து வருகிறோம் என்பதை காணும் போது, சமுதாயத்தை சீரழிக்கும் மதுவால் கிடைக்கும் வருமானத்தை யாரும் உயர்வாக நினைக்க முடியாது.
பொதுமக்களும் தங்கள் மகள்களை எப்படி கண்காணிப்போடு வளர்க்கிறார்களோ, அதுபோல மகன்களையும் கண்காணிக்க, கண்டிப்போடு வளர்க்க வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. பெண்ணுக்கு தீங்கு செய்யும் ஆண், ஒரு பெற்றோரின் மகனாகத்தானே இருப்பான். எனவே, மகன்களை படிக்கும் காலத்திலேயே பண்போடு வளர்க்க கவனம் கொடுத்தால் வருங்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
– என்று கூறியுள்ளார்.

 

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img