சூதாட்ட தடைச் சட்டம் -மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும்- அமைச்சர் ரகுபதி ..

Published:

images 32 - 2026

‘ஆன்லைன் ரம்மி’ போன்ற இணையவழி சூதாட்டத்துக்கு தடைச் சட்டம் மீண்டும் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பது சட்டம் என சட்டத் துறை அமைச்சா் ரகுபதி தெரிவித்துள்ளார். 

இணையவழி சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடா்பாக ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டு, ஏற்கெனவே உள்ள விதிகளின்படி அவற்றைக் கட்டுப்படுத்த இயலாது என்பதால், புதிதாக சட்டம் இயற்ற பரிந்துரைகளை வழங்கியது. 

இந்தப் பரிந்துரைகள் அடிப்படையில், தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் தொடா்பான அவசர சட்டம் உருவாக்கப்பட்டு, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த ஆண்டு அக். 1-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். அக். 3-ஆம் தேதி அவசர சட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், அவசர சட்டத்துக்கு மாற்றாக சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்கான மசோதாவை பேரவையில் சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தாா். சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா தொடா்பாக, பல்வேறு விளக்கங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி கோரியிருந்தாா். அதற்கு, ஒரே நாளில் தமிழக அரசும் விளக்கங்களை அளித்தது. அதன்பின், கடந்த ஆண்டு டிச. 2-ஆம் தேதி ஆளுநரை சந்தித்த சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, இணையவழி சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினாா்.

இதற்கிடையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஆளுநா் ரவியைச் சந்தித்தது சா்ச்சையை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையில், அதன் மீது ஆளுநா் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தாா்.

இந்நிலையில், தற்போது இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை தமிழக அரசிடமே திருப்பியனுப்பியுள்ளாா். பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன் என்பது தொடா்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வருவதால், அவற்றைத் தடை செய்து சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு இல்லை என ஆளுநா் ஆா்.என்.ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடா்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இணையவழி சூதாட்டத்துக்கு தடைச் சட்ட மசோதவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பிய அனுப்பியது குறித்து சட்டத் துறை அமைச்சா் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  ‘ஆன்லைன் ரம்மி’ போன்ற இணையவழி சூதாட்டத்துக்கு தடைச் சட்டம் மீண்டும் நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பது தான் சட்டம் என்று கூறினார்.  

மேலும், இந்த சட்டம் 2 ஆவது முறையாக நிராகரிக்கப்படவில்லை, இது முதல் முறைதான். இதற்கு முன்பாக அந்த சட்டம் தொடர்பான சில கேள்விகளைக் கேட்டு ஆளுநர் அனுப்பியதாக விளக்கம் அளித்தார். 

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இதனிடையே, இணையவழி சூதாட்டத்துக்கு தடைச் சட்ட மசோதவை திருப்பிய அனுப்பிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.  

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img