வெள்ளிக்கிழமை நேற்று தென்காசியில் நடைபெற்ற தமிழக பாஜகவின் மாபெரும் பொதுக் கூட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களும், பாஜக., தொண்டர்களும் பெரும் திரளாக, அண்ணாமலையின் ஆவேசப் பேச்சைக் கேட்கக் குவிந்தனர்.
சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அண்ணாமலையின் பேச்சைக் கேட்பதற்காகவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தவும் திரண்டதாக பாஜக.,வினர் பெருமிதம் பொங்கத் தெரிவித்தனர். .
இந்தக் கூட்டத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நம் தமிழகத்தைச் சேர்ந்த மகளிர், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக கடந்த ஒன்பது ஆண்டுகளில் செய்துள்ள நலப்பணிகளைப் பற்றியும், பொய்களால் கட்டமைக்கப்பட்ட திமுக, தமிழக மக்களுக்கு தொடர்ந்து செய்து வரும் பித்தலாட்டங்கள், துரோகங்கள் குறித்தும் அண்ணாமலை ஆவேசமாக எடுத்துரைத்தார்.
தமிழகத்திற்கும், தமிழுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் தந்துள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர, அடுத்த 11 மாதங்கள் தமிழக பாஜக தலைவர்களும் தொண்டர்களும் எழுச்சியுடன் பணியாற்றுவோம் என்று சூளுரைத்தார்.
பொதுக்கூட்டத்தில், தென்காசி மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை வகிக்க, தமிழக பாஜகவின் சட்டமன்றத் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மாநிலப் பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன் பாலகணபதி, A.P.முருகாணந்தம் மாநிலச் செயலாளர் மீனாதேவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.