
கும்பகோணத்தில் ஆராவமுதன் என்னும் சாரங்கபாணி பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக வரும் 29-ம் தேதி கருடசேவை. மே 4-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது
கும்பகோணத்தில் ஆராவமுதன் என்னும் சாரங்கபாணி பெருமாள் கோயில் புகழ்பெற்றது.
சாரங்கபாணி பெருமாள் தனது திருமுடியை வலது திருக்கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தேர் வடிவத்தில் அமைந்துள்ள கருவறைக்கு செல்ல உத்தராயண வாசல், தட்சினாயண வாசல் என பெயரிடப்பட்ட இரண்டு நுழைவுவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்கு திறந்திருக்கும்.
பன்னிரு ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் ஆராவமுதப் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளனர்.
விஜயநகரப் பேரரசு மன்னர் விருப்பண்ண உடையார் இக்கோயிலின் 11 அடுக்கு ராஜகோபுரத்தைக் கட்டினார். இங்கு சித்திரை திருவிழா ஏப் 26-ம் தேதி தொடங்கியது. வரும் 29-ம் தேதி கருடசேவை. மே 4-ம் தேதி தேரோட்டம். தமிழக கோயில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேராகும்.