
கோவை: வந்து உக்காருங்க.. உக்காந்தா காசு கொடுப்போம்னு சொன்னாங்க; தந்துடுவாங்களா? – இப்படிப் புலம்பியபடி கேள்விக் கணையுடன் நோக்கியவர்கள், கோவையில் அதிமுக., நடத்திய உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தவர்கள்.
உண்ணாவிரதப் போராட்டம் என்றாலும், மாநாடு போல தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார்கள் கோவை அதிமுக.,வினர். கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து, தனியார் வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கில் மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். சிலர் ரூ.300 பணம், மாலை நேரத்தில் நல்ல சாப்பாடு என்று உறுதியளித்து அழைத்து வரப்பட்டனராம். மேலும் சிலர், “எவ்வளவு தருவோம்னே சொல்லலீங்க… சாய்ங்காலம் வரைக்கும் ஒக்காந்தா காசு கொடுப்போம்’னு சொன்னாங்க. உண்ணாவிரதம் முடிஞ்சி போறப்பதான் எவ்ளோ கொடுப்பாங்கன்னு தெரியும்..” என்று சொன்னார்களாம்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆட்களைச் சேர்த்து, கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அதிமுக.,வினர் மனநலம் குன்றியவர்கள், பார்வையற்றோர், வட இந்தியர்கள், முதியவர்கள் என பல தரப்பட்ட வர்களையும் அழைத்து வந்திருந்தார்களாம். இவர்களில் பலருக்கு தாங்கள் எந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு இருந்திருக்கிறார்கள்.
இப்படி கூட்டம் கூட்டமாக பலரையும் உண்ணாவிரதப் பந்தலுக்கு அழைத்து வந்துவிட்டதால், அந்தப் பகுதியில் கூட்டம் அதிகரித்தது. பலருக்கும் அமர்வதற்கு இடம் போதவில்லை. இதனால், சாலையிலும், மேம்பாலத்தின்கீழும் மக்கள் அமர்ந்தனர்.
மதியம் 1 மணிக்குப் பின்னர், உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் ஓரளவு கூட்டம் குறைந்து காணப்பட்டது. அதன் பின்னர், பந்தலில் இருந்த சிலர், டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்களை நோக்கிச் சென்றனர். ஒரு சிலர் பார்சல் வாங்கி வந்து, உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்புறம் அமர்ந்து உணவருந்தினர். இப்படியாக உண்ணாவிரதப் போராட்டம் இன்று களை கட்டியது.
இதனிடையே, அதிமுகவினர் மது அருந்தியதை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. கோவை காந்திபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது மதுக்கடைக்கு சென்று அதிமுகவினர் மது அருந்தியதை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



