
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் இன்று அதிமுக., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சிலரும் பங்கேற்றனர்.
மத்திய அரசை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக.வை வெகுவாக சாடினார்.
உண்ணா விரதப் போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படாவிட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று, அப்போதே திமுக., காங்கிரஸிடம் கூறியிருந்தால், காவிரி பிரச்னை அன்றே தீர்ந்திருக்கும்.
ஆனால், நாங்கள் அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினோம். காவிரி உரிமைக்காகப் போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம்.
ஆனால் திமுக., காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது. அதன் மூலம், விவசாயிகளுக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்தது திமுக., என்று குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி.



