
வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதால் தினமும் 4 ஆயிரம் பறவைகளுக்கு இரையிட முடியவில்லை என்று மனம் வருந்துகிறார் ‘பறவை மனிதர்’ சேகர்.
சென்னை ராயப்பேட்டை, பாரதி சாலையில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தவர் சி.சேகர். இவர் கடந்த 25ஆண்டுகளாக அந்த வீட்டின்மொட்டை மாடியில் பறவைகளுக்கு இரையிட்டு வந்துள்ளார். இதனால் பொழுதுசாயும் நேரத்தில் இரைதேடி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளி, புறா, காகம், சிட்டுக்குருவி போன்ற பறவைகள் இவரது இல்லத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.
வீட்டின் உரிமையாளர், அந்த வீட்டை விற்க முடிவெடுத்துள்ளதால், நீதிமன்ற உத்தரவின்படி சில தினங்களுக்கு முன்பு சேகர் வெளியேற்றப்பட்டார். அவரதுஉடமைகளும் வீட்டிலிருந்து அகற்றப்பட்டன. இந்நிலையில் இவரை நம்பி இரைதேடி வரும் பறவைகள் ஏமாந்து செல்வதைப் பார்த்து சேகர் வேதனையடைந்துள்ளார்.




