
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை யொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதில் அம்மன் தேர், சப்பரத்தேர், பிள்ளையார் தேர் என 3 தேர்தல் உலா வந்தன. 10-ம் திருவிழாவான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவில் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடந்தது.
அதையொட்டி நேற்று இரவு 8 மணியளவில் சாமியும், அம்பாளும், பெருமாளும், இரு தட்டு வாகனத்தில் மேளதாளத்துடன் கோவிலில் இருந்து எழுந்தருளி தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர்.
அகல் விளக்கு தீபம் முன்னதாக தெப்பக்குளத்தை சுற்றி உள்ள அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு தெப்பக்குளம் ஜொலித்து கொண்டிருந்தது. ஜொலிக்கும் தெப்பக்குளத்தில் தெப்பம் 3 முறை உலா வந்தது. தெப்பம் மூன்று முறை உலா வரும்போது மரபு படி வடம் பிடித்து இழுப்பது வழக்கம்.
அதுபோல் தெப்பத்தின் முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேல தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழதெரு இளைஞர்களும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். 3-வது சுற்று திருவாவடுதுறை ஆதீனம் அருகே வந்த போது வாண வேடிக்கை நடத்தப்பட்டது. விழாவையொட்டி பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளில் தொப்பக்குளத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், திருவாவடுதுறை ஆதீன ஆய்வர் வீரநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாணுமாலய சாமியை தரிசனம் செய்தனர்.
ஆராட்டு விழா தெப்ப திருவிழா முடிந்த பிற்பாடு சாமி, அம்பாள், பெருமாள் மீண்டும் தட்டு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதிகளில் உலா வந்தன. அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன் திருக்கண் சாத்தி வழிபாடு செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு விழா நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.




