
சித்திரைப் பெருவிழாவில் ராமராயர் மண்டகப்படியில் விடிய விடிய நடைபெற்ற கள்ளழகரின் தசாவதார நிகழ்வை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
5 நாள் பயணமாக மதுரை வந்த அழகர் நேற்று முன்தினம் (மே 5) காலை தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி விட்டு, நேற்று (மே 6) தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு (மே 6) ராமராயர் மண்டகப்படிக்கு வந்த அழகர், அங்கு நள்ளிரவு 12 மணிக்கு விடிய விடிய தசாவதார கோலங்களில் காட்சி அளித்தார்.
முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் ஆகிய 7 அவதாரங்களில் தரிசனம் தந்தார்.
பின்னர், மோகினி அவதாரத்திலேயே இன்று (மே 7) மதியம் வரை இருந்துவிட்டு, பின்னர் ராஜாங்க திருக்கோலம் கொண்டு அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி, இரவு 11 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தை வந்தடைவார்.
அங்கு மீண்டும் கள்ளர் திருக்கோலம் ஏற்று பூப்பல்லக்கில் நாளை அதிகாலை 2:30 மணி அளவில் மதுரையில் இருந்து விடைபெறுவார்.