மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டி வரும் 2027ம் ஆண்டுக்குள் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று எரிசக்தி ஆலோசனை குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் விரைவான உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டுக்கு விரைந்து மாறுதல் என்னும் ‘பேம்’ திட்டத்தின்படி, போக்குவரத்தில் மின்சார தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், புதைபடிம எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மின்சாரப் பேருந்துகள், மூன்று சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையில், பொதுப் போக்குவரத்து அல்லது வணிகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இத்திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இருசக்கர மின்சார வாகனங்களுக்கும், தனியாருக்குச் சொந்தமான வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் எண்ணெய் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைமையிலான மாற்று எரிசக்தி ஆலோசனைக் குழு, மத்திய அரசிடம் சில பரிந்துரைகளை அளித்துள்ளது.
அதில், ‘நாடு முழுவதும் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாட்டை 2027ம் ஆண்டுக்குள் தடை செய்ய வேண்டும். 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் உள்ள வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கு மாற்ற வேண்டும்.
வரும் 2024ம் ஆண்டுக்குப் பிறகு, நகர்ப்புற பொது போக்குவரத்திற்கு டீசல் பேருந்துகள் வாங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டும். 2030ம் ஆண்டுக்குள் மின்சார பேருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்’ என்று அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது