தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. புதிதாக அமைச்சரவையில் டி.ஆர்.பி. ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். பால்வளத்துறை அமைச்சர் நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக., அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த இரண்டு வருடங்களில் சரிவர செயல்படாத அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படலாம், அல்லது சிலர் நீக்கப்படலாம் சிலர் சேர்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு ஏற்ப கடந்த 2ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் இது குறித்த எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அளித்த அறிக்கையை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதன்படி மன்னார்குடி எம்எல்ஏ., டி.ஆர்.பி. ராஜாஅமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மன்னார்குடி எம்.எல்.ஏ., வாக இருந்து வருகிறார்.
அண்மைக் காலமாக ஆவின் நிர்வாகம் குறித்த புகார்கள் பெருமளவில் நிலவி வரும் சூழலில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் . அவருக்கு பதிலாக, மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
இவரைத் தொடர்ந்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உட்பட, முக்கிய அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.