224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி ,20.99சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், மணப்பெண் ஒருவர் தங்களின் வாக்குகளை அளிக்க வாக்குச்சாவடிக்குள் வந்துள்ளார். சிக்கமகளூர் மாவட்டம் மூடிகீரே சட்டசபைத் தொகுதியில் உள்ள மக்கோனஹல்லி பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மணக்கோலத்தில் வந்த பெண் ஒருவர் ஆர்வமாக வந்து வாக்களித்தார்.
224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 2615 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர். இந்த வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.