தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சாமி ஊர்வலத்தில் எதிர்பாராத விதமாக பட்டாசு மூட்டை வெடித்ததில் சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்துள்ள சி.பள்ளிப் பட்டி கிராமத்தில் கடந்த இரு தினங்களாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவையொட்டி நேற்று இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. டாடா ஏசி மினி வேனில் அலங்கரிக்கப்பட்ட சாமியை, பொது மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர். வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த ராகவேந்திரன் (26) என்பவர் ஓட்டி சென்றார்.
வீதி உலாவில் வான வேடிக்கைகள் நிகழ்த்த பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதற்காக பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்கள் அதிகளவில் சாமி கொண்டு சென்ற வேனில் வைத்திருந்தனர். எதிர்பாராத விதமாக, ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு மின் கம்பத்தில் பட்டு மீண்டும் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டையில் விழுந்தது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதுடன், டாடா ஏசியும் தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவத்தில், ஊர்வலத்தைக் காண சாலையோரம் நின்று இருந்த ஆகாஷ் (7) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், விபத்தில் வாகனத்தில் இருந்த ஓட்டுநர் ராகவேந்திரன், நொச்சிப்பட்டியை சேர்ந்த ஆதி (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் ராகவேந்தின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.