ஐடி ரெய்டு – அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கரூர் எஸ்பி விளக்கமளித்து உள்ளார்.சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை துவங்கிய சில மணி நேரங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக-வினர் முற்றுகையிட முயன்றதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.
முற்றுகையை தொடர்ந்து, அங்கு சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வருமான வரித்துறை அதிகாரி திமுக பிரமுகரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகளை திமுக-வினர் தாக்கினர். மேலும் அவர்களது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர்.
அதிகாரிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் கரூர் காவல் நிலையம் விரைந்தனர். இதே போல் கரூரில் மற்ற இடங்களிலும் வருமான வரி சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனன் கூறியதாவது., “கரூரில் வருமான வரித்துறை சோதனைக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் காவல் படையினரையும் அழைத்து வரவில்லை.
சோதனைக்கு வந்த அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.” “சோதனை நடக்கும் இடங்களில் 150-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும். ,” என்று தெரிவித்தார்.