ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்கிய நிலையில் ராமேசுவரம் கோவிலில் நாளை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றது. நாளை தீர்த்த கிணறுகளில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் படிக்க ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான இன்று(சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திட்டக்குடி சந்திப்பு சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே 10 தலை கொண்ட ராவணனை ராமபிரான் தங்க கேடயத்தில் எழுந்தருளி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதை தொடர்ந்து திருவிழாவில் 2-வது நாளான நாளை பகல் 1:30 மணிக்கு தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் வைத்து இலங்கை மன்னராக ராவணன் தம்பி விபிஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
3-வது நாளான 29-ந் தேதி அன்று பகல் 1 மணிக்கு கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகின்றது. திருவிழாவின் 2-வது நாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் வைத்து பட்டாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு ராமர் மற்றும் விபீஷ்ணர் கோவிலிலிருந்து கோதண்டராமர் கோவிலுக்கு எழுந்தளுகிறார்கள். இதனால் நாளை கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை கோவில் நடையானது அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்பட்டு 3 மணியிலிருந்து 4 மணி வரையிலும் ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று பின்னர் கால பூஜை நடைபெறுகின்றது இதை தொடர்ந்து காலை 7 மணிக்கு ராமர் மற்றும் விபிஷ்ணர் கோவிலில் இருந்து புறப்பட்ட பின்னர் கோவில் நடையானது சாத்தப்படுகின்றது.
நாளை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.