
இன்று வேலூரில் நடைபெற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, பாரதப் பிரதமர் ஆட்சியில், தமிழர்களுக்கு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு, தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு, தமிழக மாணவர்களின் உயர் கல்விக்கு, தமிழக மகளிர் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு என ஒவ்வொரு துறையிலும், தமிழகத்துக்குச் செய்துள்ள வளர்ச்சித் திட்டங்களை, அமித் ஷா விரிவாகப் பட்டியலிட்டார்.
தமிழ் மொழியின் பெருமைகளை உலகம் அறியச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முன்னெடுப்புகள் குறித்து விவரித்தார். தமிழரின் வரலாற்று பாரம்பரிய அடையாளமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டதைப் பற்றி தனது உரையில் அமித் ஷா சுட்டிக் காட்டினார்.மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரியைப் பற்றி கேள்வி எழுப்ப திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்று அமித் ஷா பேசுகையில் காட்டமாக விமர்சித்தார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என்றார்..
கூட்டத்தில், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், தமிழக பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு என்ன செய்தது என்று புள்ளி விவரங்களுடன் வேலூர் பொதுக்கூட்டத்தில் தக்க பதிலடி கொடுத்தார் அமித் ஷா.
கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் பங்களிப்பை விவரித்தார்.