
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை நிராகரிக்கக் கோரிய மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28 ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிமன்றக் காவலை திரும்பப் பெறக் கோரி, செந்தில்பாலாஜி தரப்பில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, நீதிமன்றக் காவல் ஏற்கெனவே வழங்கப்பட்டதால் மனு செல்லத்தக்கதல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து சேகர்பாபு கூறுகையில், நீதிமன்றக் காவலில் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. குடும்பத்தினரை மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது. உடனடியாக செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தியுள்ளோம். அவரது உறவினர்களை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம் என்று கூறினார்.

இதனிடையே, அதிமுக., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அவர் மீது புகார் வந்தவுடன் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. ஆனால், அவரை மீண்டும் அமைச்சர் ஆக்கியது திமுக., அரசு. ரிமாண்டில் சிறை வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்.செந்தில் பாலாஜி நிரபராதியாக இருந்தால் சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும்; அதை விட்டுவிட்டு ஏன் இப்படி கபட நாடகம் ஆட வேண்டும்?
இன்று தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப் படுவார்கள். அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குதான் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.