
செந்தில் பாலாஜி வகித்து வந்த இரு துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்க ஒப்புதல் வழங்கிய ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக்கூடாது எனக் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவர் வகித்து வந்த இலாகாக்களை தங்கம் தென்னரசுவுக்கும், முத்துசாமிக்கும் ஒதுக்க ஆளுநர் ரவிக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.
அந்தப் பரிந்துரையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கூடுதலாக மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஒதுக்கீடு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதைம் குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பான ஆவணங்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் மாளிகை சார்பில் வெளியான அறிக்கையில், செந்தில் பாலாஜி வகித்த துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்க தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவதாகவும், ஆனால், செந்தில் பாலாஜி குற்றவியல் நடைமுறைக்கு ஆளாகி நீதித்துறை காவலில் உள்ளதால் அவர் அமைச்சராகத் தொடரக்கூடாது; செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடரும் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆளுநரின் இந்த முடிவையடுத்து, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர நிர்வாக ரீதியான அரசாணை மூலம் முதல்வரின் முடிவை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. மேலும், இது உச்ச நீதிமன்றத்துடனான தமிழக அரசின் மோதல் போக்கு என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன.