
வள்ளலார் பற்றி பேச திராவிட கும்பலுக்கு என்ன தகுதி இருக்கிறது? திராவிடவாதிகள் வள்ளலாரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
வள்ளலார் கருத்துக்கள் சனாதன தர்மத்தின் உச்சம் என தமிழக கவர்னர் ஆர். என். ரவி அவர்கள் பேசியதற்கு இந்துமுன்னணி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது . அதே சமயம் அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வரை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
உண்மையில் எதிர்ப்பு கருத்து தெரிவிப்பவர்கள் நோக்கம் வள்ளலாரை போற்றுவது இல்லை, கவர்னரை தூற்றுவதும் இந்து தர்மத்தை பழிப்பதும்.
மாட்டுக்கறி பிரியாணி விருந்து நடத்தியவர்கள் ஜீவகாருண்மே தவ வாழ்வு என்ற வள்ளலாரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
சனாதனம் என்றால் ஆதியும் அந்தமும் இல்லாதது. என்றும் நிலைத்து எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
நாத்திகம் என இறை நம்பிக்கையை எதிர்த்து பேசும் இவர்களை இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் ஏற்றுக் கொள்கிறார்களா? இவர்கள் மதமற்றவர்கள் எனக் கூறிக் கொண்டாலும் இவர்களின் நாத்திகவாதத்தை அவர்கள் ஏற்க மாட்டார்கள். அப்படி நாத்திகத்திற்கு ஆதரவு தெரிவித்த கோவையை சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞரும் முஸ்லிம் மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்பதை தமிழகம் மறக்கவில்லை. ஆனால் இந்து தர்மமான சனாதன தர்மம் ஏற்றுக் கொள்கிறது.
வள்ளலார் வாழ்க்கை அற்புதமான ஆன்மிக செய்தி. அவரது வாழ்வில் சென்னை திருவொற்றியூர் வடிவுடையான் அவரது பசியாற்றி அற்புத நிகழ்வும், அங்கு வாழ்ந்த சித்தர் இவர்தான் மனிதர் என்று போற்றியதும் வள்ளலார் பெருமைக்கு எடுத்துக் காட்டு ஆகும்.
வள்ளலார் கையொப்பமிடும்போது திருச்சிற்றம்பலம் என எழுதியே கையொப்பம் இட்டுள்ளார்.
ஆன்மிகத்தின் ஒவ்வொரு நிலையையும் எடுத்துக்காட்டியுள்ளார். அது ஆன்மிகத்தின் வழி ஆகும். ஒருவன் நேரடியாக ஆன்மிகத்தின் உச்சத்தை அடையமுடியாது. படிப்படியாக உயர அவர் வழிகாட்டி உள்ளார்.
கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை வைத்தது தமிழக அரசு. ஆனால் திருவள்ளுவரின் ஒரு குறளையாவது பின்பற்றுகிறது என்று கூற முடியுமா? அது குறித்து பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி, நாம் பின்பற்றும் வள்ளுவர் கருத்திற்கு சிலை வைப்பதனால் ஓரடியில்கூட வைக்க முடியாது என்றார்.
அதாவது கிராமங்களில் கூறுவார்களே படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்று, அதுபோல இந்த திராவிட நாத்திகக் கூட்டம் மக்கள் கொண்டாடும் வள்ளலாருக்கு விழா எடுப்பது கண்துடைப்பு.
வள்ளலார் சிவ சின்னமான திருநீறு பூசிய தெய்வீக முகமண்டலத்தை அலங்கோலம் படுத்தி மதமற்றவராக மக்களை குழப்ப அவரது ஆன்மிக அற்புத வாழ்வை கொச்சைபடுத்துகிறார்கள். இது வள்ளலாரை போற்றுகின்ற பக்தர்களுக்கு வேதனையை அளிக்கிறது.
இந்த நாட்டில் தோன்றிய எல்லா மகான்களும் காட்டிய நெறி ஒன்றே. அதன் வழிகள் வேறாக இருக்கலாம். இறுதியில் இறைவனோடு ஐக்கியமாதலே முக்தி.
சென்னை திருவல்லிக்கேணியில் முஸ்லிம் அமைப்பினர் வள்ளலாரை களங்கப்படுத்தி துண்டறிக்கை இந்துக்களிடம் கொடுத்தபோது, அதனை தட்டி கேட்டது இந்து முன்னணி. ஆனால் இந்த திராவிட அரசு நியாயம் கேட்ட 9 இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போட்டது. ஆனால் கவர்னர் வள்ளலாரை பெருமைப்படுத்தினால் பொங்கி எழுகிறார்கள். இதுதான் இரட்டை வேடம்.
எனவே திராவிடவாதிகள் வள்ளலாரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
வள்ளலாரின் 200வது ஜெயந்தியை தமிழகம் கொண்டாடும் இவ்வேளையில் திராவிட அரசியல்வாதிகள் பேசுவது அநாகரிகம் என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.