![](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2022/11/hindumunnani.jpg?resize=696%2C392&ssl=1)
திமுகவிடம் நிதி பெற்று கட்சி நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சி & கூட்டணி கட்சிகள் கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது கேலிக்கூத்து – இவர்களை நோக்கி மக்கள் கேட்கும் கேள்விகளை இந்து முன்னணி முன் வைக்கிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
மதுரை திருப்பரங்குன்றத்தில் அறநிலையத்துறை கண்காணிப்பில் ஆலயங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற குழு ஏற்பாடு செய்துள்ளது. இத்தகைய கூட்டத்தை பார்த்து பக்தர்கள் கேட்கும் கேள்விகளை இந்து முன்னணி மக்கள் முன் வைக்கிறது.
- வருமானம் உள்ள கோவில்களை விதவிதமாக திட்டம் போட்டு சுரண்டுவதைதான் இதுவரை இந்து சமய அறநிலையத்துறை செய்து வந்துள்ளது. சிதிலமடைந்த கோவில்களை பற்றி சிறிதும் கவலைப் பட்டது உண்டா?
- இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆயிரக்கணக்கான சுவாமி விக்கிரகங்கள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. பல நூறு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் பதிவு செய்யக்கூட இல்லையே ஏன்?
- விக்கிரகங்கள், தங்க கவசம் முறைகேடு முதலிய பல வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஆட்சி மாறியவுடன் காட்சி மாறியது. குற்றத்தில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருடன் வலம் வருகின்றனர். சிலை திருட்டு, சிலை கடத்தல், தங்க ரதம், தங்க கவசம் முறைகேடுகள் முதலிய வழக்குகள் என்னவாயிற்று?
- திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து கோவிலில் உள்ள விக்ரகங்கள் சமூகவிரோதிகளால் திட்டமிட்டு சேதப்படுத்துவது நடைபெறுகிறது. காவல்துறை ஒவ்வொரு முறையும் பிடிபடும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள்மனநிலை சரியில்லாதவர் என வழக்கு முடிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை கோவில் பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எடுக்கவில்லை ஏன்?
- இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் விக்கிரகம் உடைக்கப்பட்ட போதும் அந்த இடங்களை பார்வை இடுவதற்குக்கூட வரவில்லை. காரணம் வருமானம், விளம்பரம், திமுகவின் சுய தம்பட்டம் மட்டுமே இத்துறை அமைச்சரின் நிர்வாகம் என கருதுகிறாரா?
- இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சை படுத்தும் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன்?
- ஏராளமான கோவில் நிலங்கள் சட்டவிரோதமாக தனியாருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தினசரி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததாக எந்த தகவலும் இல்லை. இந்த சட்டவிரோத செயலுக்கு துணை போவது இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் என்பதற்கு முகாந்திரம் உள்ளதா?
- கோவில் தரிசனகட்டண முறைகேடு குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சூரசம்காரம், திருவண்ணாமலை கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் ஏராளமாக பக்தர்கள் வருகையை பயன்படுத்தி சினிமா தியேட்டர் போல ஆயிரக்கணக்கில் கட்டணத்தை உயர்த்தியும், போலி டிக்கெட்கள் மூலம் பிளாக் டிக்கெட் விற்ற முறைகேடுகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின்பும் வெட்கமில்லாமல் இந்து சமய அறநிலையத் துறை அமைதியாக இருந்தது ஏன்? இந்த தில்லுமுல்லு செய்வதே அந்த துறை அதிகாரிகள் என்பதாலா?
- திருக்கோவில் கணக்கு நிர்வாகம் செய்ய மட்டுமே உரிமை உடைய இந்து சமய அறநிலையத் துறை, கோவில் வழிபாடு, பூஜை முறைகள், திருவிழாக்களில் போன்ற எல்லா ஆகம முறைகளை ஏன் சிதைக்க முற்படுகிறது? கோவிலை அழிப்பது திராவிட அரசியல் என்ற கொள்கையின்படியா?
- கோவில் நிதியில் திருமண திட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட திருமண நிகழ்விலும், கோவில் நிதியில் நடத்தப்படும் எந்த துவக்க விழாவிலும் கோவிலுக்கு வந்து முதல்வர் நடத்தவில்லை? ஆன்மிக நம்பிக்கை இல்லை என்றால் இதில் முதல்வரின் பெயர் ஏன் கோவில் கல்வெட்டில் இடம்பெற வேண்டும்? அதற்கு சொந்த நிதி கொடுத்தாரா? இல்லை அரசின் நிதியை வாரிக் கொடுத்தாரா? இந்து சமய அறநிலையத் துறையின் பெயரால் திமுக விளம்பரம் தேடுகிறது என்பதுதானே உண்மை?
- பிரபல கோவில் உள்ள ஊர்களில் பக்தர்களின் வாகனங்கள் நுழைய நகராட்சி கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் நாகூர், வேளாங்கண்ணி போன்ற வேற்று மதத்தினர் இடங்களில் எந்த வசூலும் இல்லை. இந்துக்கள் இந்துக்களாக இருக்க வரியா? இதனை இந்து சமய அறநிலையத்துறை தட்டி கேட்டுள்ளதா?
- கோவில் நகைகள் உருக்கி தங்க பிஸ்கெட்களாக வங்கியில் வைப்பு வைக்கும் திட்டம் குறித்து முழு வெள்ளை அறிக்கை ஏன் சமர்ப்பிக்க மறுக்கிறது? நகைகளில் இருந்த செம்பு, முத்து, பவழம், வைரம், வைடூரியம் போன்றவை என்ன செய்தது?
- கோவில் நகைகள், சுவாமி விக்கிரகங்கள், கோவிலில் உள்ள வெள்ளி, செம்பு போன்ற அசையா சொத்து விவரம் எங்கே?
- உற்சவர் சுவாமி திருமேனிகளை பத்திரப்படுத்துகிறோம் என பாதுகாப்பு பெட்டகம் வைக்கப்படுகிறது. மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்றன. அதற்கு ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் தயவை நாடி நிற்கும் நிலையை ஏற்படுத்தவே இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளதா?
- வக்ஃப் வாரிய ஊழியர்களுக்கு அரசின் நிதி செலவு செய்யப்படுகிறது. மசூதி வருவாயிலிருந்து எந்த வருமானமும் அரசுக்கு இல்லை. ஆனால் கோவில் நிதியில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு சம்பளம், வாகனம், ஏ.சி. அறை, காபி ஸ்நாக்ஸ் செலவு வரை செய்யப்படுவது ஏன்? கோயில் வருமானத்தில் பெரும்பகுதி இதற்கே செலவு செய்யப்படுகிறது. இது மத பாரபட்சம் இல்லையா?
- ஆலயங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருவதற்கு முன்பும் நிர்வாகம் சீராக நடைபெற்று தான் வந்தது. இங்கு ஒன்றும் அங்கொன்றும் புகார் இருந்தது உண்மை தான். ஆனால் அரசு துறையில் பெரிய ஊழல் துறை என்ற நிலையை இந்து சமய அறநிலையத் துறை தொடர்ந்து தக்க வைத்துள்ளது என்பது உண்மை தானே?
- இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல நூறு கோவில்களை காணவில்லை, ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை காணவில்லை என்பதை அந்த துறையே ஒப்புக்கொண்டு உள்ளது. இந்நிலையில் கோவில் பாதுகாப்பு என்பது இந்து சமய அறநிலையத் துறையால் எப்படி சாத்தியம்?
அரசியலும் இந்து விரோத போக்கும் இந்து கோவில்களில் ஆமை புகுந்த வீடுபோல இந்து சமய அறநிலையத் துறை நுழைந்த பின்னர் கோலோச்சி நிற்கிறது. இப்படி ஆயிரக்கணக்கான முறைகேடுகளை ஆதாரத்துடன் எடுத்துக்காட்ட முடியும். எனவே இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட்டு சுதந்திரமான சட்டபூர்வமான அதிகாரம் கொண்ட வாரியம் அமைத்து அதன் கட்டுப்பாட்டில் கோவில்கள், கோவில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதே இந்து முன்னணி கோரிக்கை. கோவிலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதல்ல. கோவில் சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டும். கோவில் அரசு அதிகாரிகள் என்ற போர்வையில் கொள்ளைக்காரர்களின் வேட்டை காடாகக் கூடாது.
திமுகவிடம் நிதி பெற்று கட்சி நடத்தும் அதன் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது, பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்ப தான். இந்துக்கள் ஏமாளிகள் அல்ல. சிலரை பலகாலம் ஏமாற்றலாம். பலரை சிலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். இறைவனின் தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதை கவனத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.