சென்னை: நிலம் கையகப் படுத்தும் சட்ட விவகாரத்தில், விவசாயிகளின் நலனுக்கு எதிராக அரசு செயல்படாது என்று கூறினார் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்தகுமார். புது தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டவர். அவர் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறுவது தவறு. இந்த முறை பட்ஜெட்டில், மத்திய ரசாயன மற்றும் உரத்துறைக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை ஒதுக்கித் தந்த பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கு நன்றி. எனவே, விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கான மானியம் குறைக்கப்படாது. உர ஏற்றுமதி 10 சதவீத அளவு உயர்ந்து இருந்தாலும், உரங்களுக்கான மானியங்களை குறைக்காமல் அதன் விலை உயராமல் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படாது. விவசாயிகளின் ஒப்புதல் இன்றி யாரும் நிலங்களைக் கையகப்படுத்த முடியாது. – என்று கூறினார்.
விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அரசு செயல்படாது: அமைச்சர் அனந்தகுமார்
Popular Categories


