
பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலில் அறநிலையத்துறை நடத்திவரும் அத்துமீறல்களை கண்டித்து, பழனி மலைக்கோயில் பாதுகாப்பு பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ஜூலை 11 செவ்வாய்க் கிழமை நாளை மாலை 5.00 மணிக்கு, பழனி மயில் ரவுண்டானாவில் வைத்து நடைபெறவுள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இது குறித்து பழனி மலைக்கோயில் பாதுகாப்புப் பேரவை வெளியிட்ட பிரசுரத்தில்,
பழனி கோயில் நுழைவு வாயில்களில் பல ஆண்டுகளாக இருந்து வந்த, “இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என்ற வாசகம் பொருந்திய பதாகையை, தேவஸ்தான நிர்வாகம் அகற்றியதை கண்டித்தும்.
அந்த பதாகைகளை உடனடியாக மீண்டும் வைக்கக் கோரியும்,
பழனி மலைக்கோயில் வின்ச் ஸ்டேசனில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த அதிகாரியை தகாத வார்த்தைகளால் மிரட்டல் விடுத்த இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்தும்,
தொடர்ச்சியாக பழனி மலைக்கோயில் இந்துக்களின் இறை நம்பிக்கை இழிவு படுத்திவரும் இந்து சமய அறநிலையத்துறையின் ஏதேச்சைய அதிகாரத்தை கண்டித்தும்,
வசதி படைத்தவர்கள் மட்டும் தரிசனம் செய்யும் பிரேக்கிங் தரிசன முறையை அமல்படுத்த நினைக்கும் அறநிலையத்துறையை கண்டித்தும்,
காலபூஜை கட்டணம் மற்றும் தங்கரத கட்டணம் போன்றவற்றை உயர்த்தக்கூடாது என்று வலியுறுத்தியும்,
பழனி மலைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் ஆகியோருக்கு சுவாமி தரிசனம் மற்றும் வின்ச், ரோப்கார்களில் முன்னுரிமை வழங்க மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும்.
தினமும் மலைக்கோயில் இராக்கால பூஜையானது குறித்த நேரத்தில் நடத்தாமல், அங்குள்ள அதிகாரிகள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன், அவர்கள் இஷ்டத்திற்கு 9 மணி, 10 மணி, 11 மணி என்று ஆகமத்திற்கு புறம்பாக நடத்துவதை கண்டித்தும்,
கள்ளிமந்தையத்தில் உள்ள பழனி கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் பக்தர்கள் தானமாக கொடுத்த பசுமாடுகளைப் பராமரிக்காமல், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தானமாக வழங்குவதாகக் கூறி கடந்த மூன்று நாட்களுக்கு முன் 220 மாடுகள் அடிமாடுகளாக விற்கப்பட்டுள்ளதை கண்டித்தும்,
இப்படி தொடர்ச்சியாக கோடான கோடி முருக பக்தர்களின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்தி வரும் பழனி தேவஸ்தான நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் இந்து சமுதாய சொந்தங்கள், முருக பக்தர்கள் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும். நமது கோயில், நமது உரிமையை மீட்க ஒன்று பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.