
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று ஆர்எஸ்எஸ்., அமைப்பின் கூட்டம் தொடங்குகிறது. ஒரு வாரம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அந்த அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொள்கிறார்.
ஆர்எஸ்எஸ்., அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டம், இந்த வருடம் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறுகிறது. திங்கள் கிழமை இன்று தொடங்கும் கூட்டத்தில் பங்கேற்க ஆர்எஸ்எஸ்., அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் தமிழகம் வந்தார்.
இன்று ஊட்டியில் நடைபெறும் ஆர்எஸ் எஸ்., கூட்டத்தில் கடந்த ஓராண்டில் ஆர்எஸ்எஸ்., இயக்கத்தின் செயல்பாடுகள்; சாதனைகள், எதிர் கொண்ட பிரச்னைகள் குறித்தும், அடுத்த ஓராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கின்றனர். வரும் 2024 மக்களவைத் தேர்தல், ஆர்எஸ்எஸ்., இயக்கத்தின் நூற்றாண்டு, அதற்கான செயல் திட்டங்கள் இவை குறித்தும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
முன்னதாக, நேற்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆர்எஸ்எஸ்., அகில பாரத தலைவர் மோகன் பாகவத், பங்கேற்றுப் பேசினார்.

கோவையில் நடந்த விழாவில் மோகன் பகவத் பேசியபோது… “இந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது. உலகில் எல்லா பக்கங்களிலும் இந்து கோவில்கள் உள்ளன. இது நமது கருத்துகளை மதத்தின் சாரத்தை அங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. தமிழகத்தின் ராஜராஜ சோழன் கடல் கடந்து சென்று கோவில்களை நிர்மாணம் செய்தான். அதன் மூலம் அங்கெல்லாம் நமது கருத்துகள் பரவி உள்ளது. யாரையும் வெற்றி கொள்ள வேண்டியதில்லை. மாறாக நமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்.
“வேற்றுமையில் ஒற்றுமை என்பது, ஹிந்து மதத்தின் தர்மம். ஹிந்து மதத்தில் உண்மை, துாய்மை, அன்பு, தவம் நான்கும் முக்கியமானது. இதை மேலும் வளர்க்க வேண்டும். யாரையும் வெற்றி கொள்ள நாம் போட்டியிடக் கூடாது. ஹிந்து மதத்தின் கருத்துகளையும், சிறப்பையும் எடுத்துச் சொல்லி, உற்றார், உறவினர் நண்பர்கள், மதம் மாறுவதை தடுக்க வேண்டும். மாற்றம் என்பது நம்மில் துவங்க வேண்டும்” என்றார்.
கோவை ஒண்டிப்புதூரில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தில் திரிசக்தி யாகம் நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் இதற்குத் தலைமை வகித்தார். மோகன் பாகவத் யாகத்தில் பங்கேற்றார். மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் எழுதிய கம்போடிய பயணம் புத்தகம் வெளியிடப்பட்டது.