
சமூக வலைதளங்களில் சமூக வலைதளங்களில் அண்மையில், ஒரு ஜோக் வைரலானது. அதில், கட்டட வேலை செய்யும் ஒருவர், வேலைக்கு வந்து புடைவை உள்ளிட்ட ஆடைகளை அவிழ்த்து ஓர் அறையில் போட்டு விட்டு, பெண் வேடம் கலைத்த ஆணாக வேலையில் ஈடுபடுவார். ஏன்பா இப்படி என்று ஒருவர் கேட்கும் போது, இலவச பயணத்துக்காக பெண் வேடம் போட்டு தினமும் காசை மிச்சப் படுத்துகிறேன் என்பார். இந்த ஜோக் இப்போது உண்மையாகியிருக்கிறது கர்நாடகாவில்!
கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து சேவை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதன்படி காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பின்னர் அங்கே மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சக்தி யோஜனா என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதே நேரம் தமிழகத்தைப் போலன்றி, கர்நாடகாவில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் மட்டுமே இலவச பயணம் மேற்கொள்ளலாம். அவர்களுக்கு சக்தி கார்டு என்ற பயண அட்டை வழங்கப்படும். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்ற அடையாள அட்டை இருந்தால் மட்டுமே சக்தி கார்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு இலவசம் / இலவச பேருந்து என்று ஸ்டிக்கர் ஒட்டிய பேருந்துகளில் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்கலாம். மற்ற பேருந்துகளில் பெண்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் மாநில அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்காக ஒருவர் பர்தா அணிந்து பெண் வேடமிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. பேருந்து நிறுத்தத்தில் பர்தா அணிந்து அமர்ந்திருந்த நபரின் உடல்வாகு மற்றும் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்ததை அங்கிருந்த பொதுமக்கள் கவனித்தனர். இதை அடுத்து, அவரது முகத்தை திரை விலக்கிப் பார்த்தபோது அவர் ஓர் ஆண் என்று தெரியவந்துள்ளது.
58 வயதான அந்த நபர் பிச்சை எடுப்பதற்காக அந்த உடையில் வந்ததாகக் கூறி சமாளித்துள்ளார். ஆனால் அவரது பேச்சு நம்பும்படியாக இல்லை என்பதாலும், அவரிடம் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கான சக்தி அடையாள அட்டை இருந்துள்ளதுள்ளதாலும், அந்த நபர் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்காகத்தான் பர்தா அணிந்து வந்திருக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.