
‘ஜனம் தமிழ்’ செய்தித் தொலைக்காட்சியின் ‘டிஜிட்டல்’ ஒளிபரப்பு தமிழகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.
‘ஜனம்’ தொலைக்காட்சி மலையாள செய்திகளுக்கான முக்கியமான சாட்டிலைட் சேனலாக உள்ளது. 2015ல் மலையாளத்தில் க்ரௌட் ஃபண்டிங் எனப்படும் ஆர்வலர்கள் பலர் சேர்ந்து முதலீடு செய்து உருவாக்கப்பட்ட சேனலாக அது உள்ளது. தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே கேரளத்தில் செய்திகளுக்கான தளத்தில் தனியிடம் பதித்தது ஜனம் டிவி.
இந்நிலையில் தமிழில் அது போல் ஒரு முயற்சி கொண்டு வரப்பட வேண்டும் என்று தேசியவாதிகள் பலரும் தெரிவித்த கருத்துகள் வடிவாக்கம் பெற்று, ஜனம் டிவி.,யே தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது தன் தமிழ் செய்திச் சேனலை ‘ஜனம் தமிழ்’ என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இதன் லோகோ வெளியீடு இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது. ஜனம் டிவி., தமிழ் தோற்றத்துக்கான பின்னணியை அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் ஒரேநாடு இதழாசிரியர் நம்பி நாராயணன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
சென்னையில் நேற்று மாலை நடந்த இதன் தொடக்க விழாவில் ‘ஜனம் தமிழ்’ டிஜிட்டல் ஒளிபரப்பை தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடக்கி வைத்தார். ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அதன் யுடியூப் சேனலை தொடங்கி வைத்தார். சக்தி மசாலா அதிபர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் ஜனம் தமிழ் பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி வைத்தார். மதுரை பேராசிரியர் அதன் இன்ஸ்டாக்ராம் பக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி நந்தகுமார், பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், அதிமுக., முன்னாள் எம்.எல்.ஏ.,வும் முன்னாள் டிஜிபி.,யுமான நட்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
விழாவில் பேசிய அண்ணாமலை, ”தமிழகத்தில், தேசியம் குறைவாக பேசப்படுகிறது. தேசிய செய்திகள் விரிவாக அலசப்படுவதில்லை. உலகின் தொன்மையான தமிழை உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும். செய்தி தொலைக்காட்சிகளில், 80 சதவீதம் அரசியல் தான். மற்ற செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகவே ‘ஜனம் தமிழ்’ துவங்கப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக, டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தில் தமிழிசைக் கச்சேரி இடம்பெற்றது.