திருநெல்வேலி -சென்னை -திருநெல்வேலி வந்தே பாரத் மதுரை திருச்சி ஸ்டேஷனை விட்டால் எங்கேயும் நிற்காது என
வெளியான புது தகவல் பலரையும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து சென்னை , சென்னை -திருநெல்வேலி க்கு ஆகஸ்ட்டு மாத இறுதியில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என்ற தகவலை ரயில்வே வெளியிட்டுள்ளது.
பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை வந்தே பாரத் ரயில்கள் பெற்று வருகின்றன. முற்றிலும் மாறுபட்ட வெளித்தோற்றம் மற்றும் பல்வேறு வசதிகள் வந்தே பாரத் ரயிலில் இருப்பதால் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் சாய்வு இருக்கைகள், அகலமான ஜன்னல்கள், முழுவதும் ஏசி, தானியங்கி கதவுகள், வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என இப்படி பல வசதிகள் வந்தே பாரத் ரயிலில் உள்ளது.
சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பயணிகளுக்கு விமானத்தில் உள்ள வசதிகளுக்கு நிகரான வசதிகள் கொடுக்கப்படுவதால் இந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டில் முதல் முறையாக கடந்த 2019 – ஆம் ஆண்டு டெல்லி – வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
தற்போது வரை நாடு முழுவதிலும் மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருக்கை வசதிகள் எப்படி: சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர் வழியாக மைசூரு வரை ஒரு வந்தே பாரத் ரயிலும், சென்னை – கோயம்புத்தூர் இடையே ஒரு வந்தே பாரத் ரயிலும் என தமிழகத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பயணிகள் போக்குவரத்து அதிகம் நிறைந்த தென் மாவட்ட வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்தது.
எந்த ரயில் நிலையங்களில் நிற்கும்: முதல்வர் மு.க ஸ்டாலின் கூட பிரதமரிடம் நேரடியாகவே இந்த கோரிக்கையை வைத்து இருந்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிடப்பட்டது. அதுவும் அடுத்த மாத தொடக்கத்தில் இந்த ரயிலை இயக்குவதற்கான பணிகள் நடந்து வந்தது. முற்றிலும் இருக்கை வசதிகள் மட்டுமே கொண்ட ரயிலாக சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
ஆரம்பத்தில் 8 பெட்டிகளை கொண்டதாகவே இந்த ரயில் இயக்கப்படும் என்றும் பயணிகளின் பயன்பாட்டை பொறுத்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இந்த ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்ற தகவலை ரயில்வே வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ஆகஸ்டு மாத இறுதியில்: முதலில் சென்னை நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயிலை நவம்பர் மாதத்தில் தான் இயக்க திட்டமிட்டோம். ஆனால் தண்டவாள மேம்பாட்டு பணிகள் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே முடியும் தருவாயில் உள்ளது. எனவே வரும் ஆகஸ்டு மாத இறுதியில் சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். வழக்கமாக எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பயண நேரத்தை விட இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிகள் பயணிக்கும் போது 2 மணி நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
அதாவது 8 மணி நேரத்தில் சென்னை – நெல்லை ரயில் வந்தடையும். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 4 ரயில் நிலையங்களில் மட்டுமே ரயில் நிற்கும். இருக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் மட்டுமே வரும் ஆகஸ்டு மாத இறுதியில் இயக்கப்பட உள்ளது. 8 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை.
சிறப்பம்சங்கள்: எனவே பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டு அதாவது 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னை நெல்லை இயக்கப்படும் இந்த ரயிலில் ஒரு பெட்டி முழுவதுமாக விஐபிகளுக்காக ஒதுக்கப்பட உள்ளது. பிற பெட்டிகளில் ஒரு பக்கம் 3 சீட்களும் மற்றொரு பக்கம் 2 சீட்களும் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் அதிகபட்சமாக 552 பயணிகள் வரை பயணிக்கலாம்.
கட்டணத்தை பொறுத்தவரை விஐபி கோச்சில் பயணம் செய்ய 2,800 முதல் 3 ஆயிரம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. பிற பெட்டிகளில் ரூ. 1,200 முதல் 1,300 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று தெரிகிறது. தற்போது இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் சராசரியாக ஆயிரம் என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது.
பயண நேரம்: நெல்லையில் இருந்து காலை 6 மணி அளவில் புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2 முதல் 2.30 மணிக்குள் சென்னை வந்து சேரும் என்றும் சென்னையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் நெல்லைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக தற்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சராசரியாக 10 மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொள்கிறது. ஆனால் வந்தே பாரத்தில் பயணித்தால் 2 மணி முதல் இரண்டரை மணி நேரம் வரை பயணிகளுக்கு மிச்சம் ஆகும் எனத்தெரிகிறது.