
ஶ்ரீரங்கம் திருக்கோவில் கிழக்கு கோபுரம் சிதைவடைந்து விழுந்துள்ளது, இந்து சமய அறநிலையத்துறை அலட்சியம். ஆமை வேகத்தில் செயல்படும் அதிகாரிகள். பக்தர்கள் உயிர் கிள்ளுகீரையா? என்று கேட்டு, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
வரலாற்று சிறப்புமிக்கதும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதுமான ஶ்ரீரங்கம் திருக்கோவில் கிழக்கு கோபுரம் சிதைவடைந்து விழுந்து உள்ளது.
இது எத்தகைய அபசகுணம். கோவில் வளாகம் தீ பிடிப்பது, சிதிலமடைந்து சிதைவது போன்றவை ஆட்சியாளர்கள் அலட்சியத்தால் ஏற்படுவது. இது போன்ற சம்பவங்கள் ஆட்சியாளர்களுக்கு வரும் ஆபத்தை குறிப்பது என்பது மக்கள் நம்பிக்கை.
நூறு ஆண்டுகள் கடந்தாலே தொன்மையானது என்று பாதுகாக்கபட வேண்டும் என்பதைக் கூட அறியாத குருடர்களாக அறநிலையத்துறை இருந்துவருகிறது வேதனைக்குரிய விஷயம்.
பல நூற்றாண்டுகள் கடந்த ஸ்ரீ ரங்கம் கோவில் போலுள்ள பல கோவில்கள் கலாச்சார பாரம்பரியமாக பாதுக்காக்க பட வேண்டியவை. சிதிலமடைந்துள்ளதை சுட்டிக்காட்டி சில நாட்கள் முன்பு இந்து முன்னணி மற்றும் ஆன்மிக பெரியவர்கள் எச்சரித்தனர். இருந்தும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறியது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களை செயல்பாபு என முதல்வர் புகழ்ந்து சில மாதங்களுக்கு முன்பு பேசினார். செயல்பாபு என்று முதல்வரால் பாராட்டப்பட்டவரின் நடவடிக்கையே இப்படி என்றால் மற்றவர்களின் செயல்பாடு எத்தகையது என தமிழக மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தெய்வாதீனமாக இந்த அசம்பாவிதம் பகலில் நடைபெறவில்லை. இது இறைவனின் கருணை என்றே கருதுகிறோம். பக்தர்கள் நடமாட்டத்தின் போது நடந்து இருந்தால் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். தமிழக அரசின் மெத்தனபோக்கு இதற்கு காரணம்.
உலகப் புகழ் பெற்ற ஶ்ரீ ரங்கம் திருக்கோவிலில் நடந்துள்ள இந்த அசம்பாவிதத்தை உடனே சீர் செய்து தக்க பரிகாரம் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.