
தமிழ்நாடு கல்வித் துறையில் திக நாத்திகவாதம், நக்சல் பிரிவினைவாதம் திட்டமிட்டு ஆட்சி செலுத்துவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
சமீபத்தில் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் கல்லூரிகளில், பள்ளிகளில் நடத்த ஒரு சுற்றறிக்கை உயர் கல்வித் துறை மற்றும் பள்ளி கல்வித் துறையால் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் யார் யாரை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்ற தனியான குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது .
மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நிகழ்ச்சி நடத்தகோரி ஒரு சுற்றறிக்கை அனுப்பபடுகிறது.. பள்ளிகளுக்கு வந்த பட்டியலின் படி அல்லது உயர்கல்வித்துறை அல்லது பள்ளி கல்வி துறை எந்தந்த மாவட்டங்களுக்கு யார் போய் பேசுவது என தீர்மானித்துள்ளது போல பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் திராவிட கழக ஓவியா உட்பட நக்சல், பிரிவினைவாதிகள், நாத்திகவாதிகள் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
பண்பாட்டு நிகழ்ச்சி என்ற பெயரில் நாத்திகம், சாதிய பாகுபாடு, பிரிவினைவாதம், தேச விரோத கருத்துக்கள் மாணவர்கள் மனதில் திணிக்க திமுக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அச்சப்படுகிறோம். கடந்த காலங்களில் மாணவர்கள் மனதில் தேசவிரோத கருத்துக்கள் திணித்து அவநம்பிக்கை ஏற்படுத்தி தவறான பாதையில் மாணவர்கள் செல்வதற்கு காரணமாக இருந்தது திமுக என்பது வரலாறு.
மொழி, இனம், சாதி உணர்வுகளை தூண்டிவிடுவது அபாயமானது. கடந்த சில மாதங்களாக சாதிய சச்சரவுகள் அதனால் வன்முறைகள் தமிழகத்தில் பெருகி உள்ளன என்பதை சுட்டிக் காட்டுகிறோம். ஓட்டு வங்கி அரசியலுக்காக மாணவர்கள் மனதில் தீய சிந்தனையை விதைப்பது அதிகார துஷ்பிரயோகம்.
எனவே தமிழக மக்களும், பெற்றோர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கு பேசப்படும் கருத்துக்கள் பேச வருபவர்கள் குறித்து கண்காணிக்க வேண்டும். பிரிவினை, சாதி உணர்வை தூண்டும் கருத்துக்கள் பேசுவதாக தெரிந்தால் உடனே தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்லது.
பள்ளி கல்வி துறை இத்தகைய போக்கை கைவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். பிரிவினவாத நக்சல் பிரச்சாரங்கள் நடந்தால் இந்து முன்னணியின் இந்து இளைஞர் முன்னணி களத்தில் இறங்கி போராடி தடுத்து நிறுத்தும் என தெரிவித்துக் கொள்கிறோம்