
இன்றைய என் மண் என் மக்கள் – பயணம், சங்க கால இலக்கியங்களிலும் புராணங்களிலும் இடம்பெற்ற , அசுரர் குடி கெடுத்த ஐயன் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் நகரத்தில் பெரும் மக்கள் திரள் நடுவே இனிதே நடந்தேறியது… என்று குறிப்பிட்டிருக்கிறார் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை.
அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் பாத யாத்திரை இப்போது 17வது நாளைக் கடந்துள்ளது. மதுரையை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்றார். தொடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் அவரது பாதயாத்திரை தொடர்ந்து நடந்து வருகிறது.
தனது பாத யாத்திரை குறித்து அண்ணாமலை குறிப்பிட்ட போது, ““அண்ணாமலையின் பாதயாத்திரையால் என்ன பலன்; இத்தனை ஆண்டு காலமாக, தேசிய கட்சிகள் மீது ஈர்ப்பே இல்லாமல் இருந்த தமிழக மக்கள், எப்படி பாஜக.,வை விரும்பத் தொடங்குவர்; மொழி, -இனம் என்றெல்லாம் ஏராளமான சிக்கல்கள் இருக்கிறதே’ என்று பலரும் கேட்கின்றனர். முதலில், அடிப்படையான ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்கள் மிகவும் கூர்மையானவர்கள், புத்திசாலிகள். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டாலும், ஒட்டு மொத்தமாக ஒரே மாதிரியான தீர்ப்பையே இதுவரை வழங்கி வந்துள்ளனர். மாநில கட்சிகளால் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ள மாயக் கதைகள், அடிப்படையில் உள்ள அவர்களின் அச்சம், கலக்கத்தை மாற்றுவதில் தான் முதலில் கவனம் செலுத்துகிறோம்… என்று குறிப்பிட்டார்.
மேலும், பாத யாத்திரையில் பயணிக்கும் போதுதான், அறைக்குள் அமர்ந்து நாம் செய்யும் அரசியல் வேறு; அடித்தட்டு மக்களின் அரசியல் பார்வையே முற்றிலும் வேறு என்பதை அறிய முடிந்தது. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், இலவசங்களை வாரி வழங்குவதன் வாயிலாக, மக்களை திசை திருப்ப முடியாது. இலவசங்களை மக்கள் யாசிக்கிறார்கள் என்று நினைத்தால் தவறு; ஆட்சியாளர்களுக்கு ஆலோசனைகள் சொல்லும் அளவிற்கு மக்கள் யோசிக்கிறார்கள்; அலசி ஆராய்கிறார்கள்…” என்று தான் பாத யாத்திரையில் கண்ட கேட்ட அனைத்தையும் தனது பதிவுகளில் தெளிவாக்கி விடுகிறார் அண்ணாமலை.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்த போது, கப்பலோட்டிய தமிழர், வ.உ.சிதம்பரனார் பிறந்த புண்ணிய பூமி. துாத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே, முதல் உள்நாட்டு கப்பல் சேவை துவக்கிய மனிதர். ஆங்கிலேயருக்கு எதிராக செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டி, வ.உ.சி., 1908ல் சிறையில் தள்ளப்பட்டார். சிறையில் பல துன்பங்களை அனுபவித்து, 1912ல் விடுலையானார். அன்று தேசத்திற்காக கப்பல் நிறுவனத்தை, வ.உ.சி., தொடங்கினார். இன்று, தி.மு.க.,வில் கப்பல் முதலாளிகள் இருக்கின்றனர். ஒருவர் டி.ஆர்.பாலு; மற்றொருவர் கனிமொழி. இவர்களின் இரு நிறுவனமும் பலன் பெறவே, சேதுசமுத்திர திட்டத்தை பிடித்து தொங்குகின்றனர்… என்று குறிப்பிட்டார் அண்ணாமலை.
விளாத்திகுளம் பகுதியில் பாத யாத்திரை சென்ற போது, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளம், தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கு வந்திருக்க வேண்டும். மத்திய அரசிடம் இதை வலியுறுத்தி பெற, அன்றைய முதல்வர் அண்ணாதுரை, விஞ்ஞானி சதீஷ் தவானுடன் சந்தித்து பேச ஏற்பாடானது. ஆனால், முதல்வர் செல்லாமல் அன்றைய அமைச்சர் மதியழகனை அனுப்பினர். சதீஷ் தவான் பல மணி நேரம் காத்திருந்தார்; மதியழகன் தள்ளாடிய நிலையில் வந்தார். எதற்காக தள்ளாடினர் என்று, தி.மு.க.,வினர் தான் சொல்ல வேண்டும். சந்திப்புக்கு பின் வெளிய வந்த சதீஷ் தவான், இதற்கு மேல் தமிழகம் வேண்டாம்; ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஏவுதளம் அமைப்போம் என்று அறிவித்தார். இது தான் தி.மு.க.,வின் வரலாறு. இந்தச் சம்பவம் பற்றி, புகழ்பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணன், தன் சுயசரிதையான, ‘ரெடி டு பையர்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
“மீண்டும், 50 ஆண்டுகளுக்கு பின், இஸ்ரோ தமிழகம் நோக்கி வந்துள்ளது. புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கான நிலங்களை, குலசேகரப்பட்டினத்தில் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்போதும், தி.மு.க., ஆட்சி. இது, 1967 இல்லை என்பதை தி.மு.க., நினைத்து, இஸ்ரோவுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இதுவரை தமிழக மக்களிடத்தில், குடும்பக் கொள்ளை ஆட்சியும், மலிந்து விட்ட ஊழலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது தி.மு.க., போன்ற கட்சிகளுக்கு சாதமாக இருந்து விட்டது. இப்போது, நிலைமை மாறிவிட்டது. மோசமான பட்ஜெட்டால், அரசின் நிதிநிலை எப்படி பாதிக்கப்படுகிறது; வருவாய் இழப்பினால் வரும் ஆபத்துக்கள் என்ன; மக்களின் வாங்கும் சக்தி வணிகத்தை எப்படி பாதிக்கிறது; அரசு வாங்கி குவிக்கும் கடனால், மக்கள் எப்படி பாதிக்கின்றனர் என்ற பொருளாதார தத்துவங்கள், தி.மு.க., அமைச்சர்களுக்கு புரியவில்லை; ஆனால், கடைக்கோடி மனிதனுக்கு நல்ல புரிதல் உள்ளது.
“ஜாதிய, இனவாத, பிரிவினைவாத, மொழி அரசியலை எல்லாம் மக்கள் வெறுக்கத் தொடங்கி விட்டனர். இதனால் தான், மணிப்பூரைப் பற்றி பேசிய, காங்., – எம்.பி.,யை பொதுமக்கள் பேசவிடாமல் தடுத்து அனுப்பினர். கோவிலுக்கு முன்னால் கடவுள் இல்லை என்று கூட்டம் நடத்திய, தி.க.,வினரை பெண்கள் தடுத்த நிகழ்வும் நடந்துள்ளது. பொதுமக்களின் இந்த விழிப்புணர்வும், தாக்கமும், தமிழகத்தில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. சமீபத்தில், 11ம் உலகத் தமிழ் மாநாட்டில், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பிரதமர் மோடியை தரம் தாழ்த்தியும் பேசிய திருமாவளவன் பேச்சுக்கு, மலேஷிய தமிழ் அமைச்சர் சரஸ்வதி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
“பிரதமர் பேசும் மொழியை, நம் தமிழ் மக்கள் அறியாத காரணத்தால், மோடி பற்றிய உண்மைக்கு புறம்பான அவதுாறுகளை அதிகம் பரப்பி, அதன் வாயிலாக இதுவரை பலனடைந்து கொண்டிருந்த மாநில கட்சிகளின் பிழைப்பிலே, மண் விழுந்திருக்கிறது என்பதை, ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.” என்று பேசினார் அண்ணாமலை.
அவரது பாத யாத்திரை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் சென்ற போது, அவருக்கு ஆழ்வார் திருநகரி ஜீயர் ஆசியளித்தார். பிராமண சமுதாயத்தினர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து, மரியாதை செய்தார்கள். அதைத் தொடர்ந்து திருச்செந்தூரில் அவர் பாத யாத்திரை சென்றது குறித்துக் குறிப்பிட்ட போது, “இரண்டாம் படை வீடாம் திருச்செந்துாரில் பாதயாத்திரையின் 16வது நாளை நிறைவு செய்திருப்பது, பெருமைக்குரியது. அநீதியையும், அக்கிரமத்தையும், அடாவடியையும், அராஜகத்தையும் செய்த அசுரர்களை அடியோடு அழித்து, வெற்றி கொண்ட இந்த திருச்செந்துார் மண், நம் நோக்கத்திற்கும், பாதயாத்திரைக்கும் பலம் சேர்க்கிறது.” என்றார்.
முக்கியமாக, திருச்செந்துார் பற்றிக் குறிப்பிட்ட போது, திருச்செந்துார் முருகன் கோவிலில், கடவுளுக்கு நேர்ந்து பசு மாடு அளிப்பர். தணிக்கை அறிக்கையில், 5,309 மாடுகளை காணவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் மாட்டைக் கொடுத்த பதிவுகள் இருக்கின்றன; ஆனால், மாடுகளை காணவில்லை. மாடுகளைத் திருடி, தி.மு.க.,வினருக்கு விற்று விட்டனரா? ‘கிணற்றை காணவில்லை’ என வடிவேலு கதறுவதுபோல, திருச்செந்துார் கோவிலில் மாடுகளைக் காணவில்லை.” என்று குறிப்பிட்டார்.
திருச்செந்தூரில் தனக்கு ஏற்பட்ட பயண அனுபவத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அண்ணாமலை. அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது…
இன்றைய #EnMannEnMakkal பயணம், சங்க கால இலக்கியங்களிலும் புராணங்களிலும் இடம்பெற்ற , அசுரர் குடி கெடுத்த ஐயன் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் நகரத்தில் பெரும் மக்கள் திரள் நடுவே இனிதே நடந்தேறியது. “நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்” என்று தொல்காப்பியத்தில் புகழப்பட்ட முருகப்பெருமானின் பராக்கிரமம் நிறைந்த ஊர். ஆதிசங்கரருக்கு அருளிய புண்ணிய பூமி.
1646ஆம் ஆண்டு காலகட்டத்தில், திருச்செந்தூர் முருகன் கோவிலை டச்சு படைகளிடம் இருந்து காப்பாற்ற திருச்செந்தூர் மக்கள் ஒன்றுகூடி டச்சு படையை எதிர்கொண்ட வீரவரலாறு கொண்ட ஊர் இந்த திருச்செந்தூர். அன்று டச்சுக்காரன் முருகனை திருடினான் இன்று இந்து சமய அறநிலையத் துறை, முருகரை தவிர மற்ற அனைத்தையும் திருடுகிறது. நம் கோவிலில் நடக்கும் அத்துமீறல்களை நாம் தட்டி கேட்கவேண்டாமா? நம்மை காக்கும் முருகனின் சொத்தை காப்பது நமது கடமை இல்லையா?
புராதன கோவில்களின் நகைகள் உருக்கப்படுகின்றன. பூஜை புனஸ்காரங்கள் நிறுத்தப்படுகின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடவுளுக்கு வேண்டி, பசுமாட்டை தானம் கொடுப்பார்கள். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த தணிக்கை அறிக்கையின்படி, அப்படி தானமாகப் பெற்ற 5,309 பசு மாடுகளை காணவில்லை. மாடுகளைத் திருடி விற்றுவிட்டார்களா? கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள், கோவில் சம்மந்தப்பட்ட பொருட்கள் மட்டும் 50,000க்கும் மேல் இருக்கும் என 1989-ல் ‘யுனெஸ்கோ’ கூறியுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 350க்கும் மேற்பட்ட சிலைகளை நமது பாரத பிரதமர் மீட்டுக் கொண்டு வந்துள்ளார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் வெற்றிலைக்கு, இந்த வருடம் ஏப்ரல் மாதம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது திருச்செந்தூருக்குக் கிடைத்த பெருமை.
மோடியின் முகவரி: திருச்செந்தூர்
தமிழகத்தில் ஏழு ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட மொத்த முத்ரா கடனுதவி 2,02,603.94 கோடி ரூபாய். இதன் மூலம் பலனடைந்தவர்களில் ஒருவரான திருமதி ஆனந்தவள்ளி, வருடம் 6000 ரூபாய் பெறும் விவசாயிகளில் ஒருவரான திரு மந்திரவேல், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு பெற்ற திரு பரமசிவம், சுவாநிதி திட்டத்தில் பலனடைந்துள்ள திருமதி தீபா, பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற்ற கருப்பட்டி வியாபாரம் செய்யும் திருமதி அற்புதமணி. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முகவரி.
மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள், கடலோர மீன் உற்பத்திக்காக ₹26,050 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தில் இதுவரை மத்சய சம்பதா மற்றும் உட்கட்டமைப்புக்கு ₹3,000 கோடிக்கும் அதிகமான செலவில் திட்டங்கள் நிறைவேற்றியுள்ளார்.
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனால் தொகுதிக்கோ மக்களுக்கோ எந்த பலனும் இல்லை அமலி நகர் தூண்டில் வளைவு பாலம் அமைக்க மீனவ சகோதரர்கள் ஒரு வாரத்துக்கும் மேலாகப் போராட்டம் செய்தும், திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்கிறார். மீனவ சகோதரர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட இந்த ஊழல் திமுக அரசு நிறைவேற்றவில்லை. அமைச்சரோ, ஊழல் சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், கச்சத் தீவைத் தாரை வார்த்த, நம் மீனவ சகோதரர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்த, சுயநல சந்தர்ப்பவாத திமுக காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர வாக்களிப்போம்.