தமிழக திருக்கோவில்களில் இருந்து கைப்பிடி மண்–தடுக்கும் தமிழக அரசு- இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத் தக்கது என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
இந்திய அரசு நிர்மாணித்துள்ள புதிய நாடாளுமன்ற வளாகத்தில் “அம்ருத்” என்ற பெயரில் அழகிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. என் மண் என் தேசம் என்ற இயக்கத்தின் கீழ் விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்திய ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நாட்டின் அனைத்து புனித இடங்களின் மண், மற்றும் புனித நீர் வைக்கப்பட இருப்பது எல்லோரும் அறிந்ததே. அதற்காக தமிழக திருக்கோவில்கள் உட்பட 350 இடங்களில் இருந்து கைப்பிடி மண் எடுத்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் கோவிலில் கைப்பிடி மண் எடுப்பதை தடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அநாகரிகமாக செயல்பட்டு உள்ளனர். கைப்பிடி மண் எடுப்பதை கனிமவளம் என பேசியுள்ளனர். இது எத்தகைய கீழ்த்தரமான மனோபாவம். தாய் மண் எடுத்து ஒரு புனிதமான காரியத்தைச் செய்வது தொன்றுதொட்டு தமிழ் பண்பாட்டில் உள்ள சிறப்பான நிகழ்வு. இதனை தெரியாமலோ, புரியாமலோ இருக்கும் இவர்கள் வாதம் அற்பத்தனமானது.
அதே சமயம் சென்னை அயனாவரம் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய திருக்குளத்தில் முறைகேடாக, சட்ட விரோதமாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் கொள்ளையை கையும் களவுமாக இந்து முன்னணி பிடித்துகொடுத்தது. மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்க வைத்தது. ஆனால் அதுகுறித்து புகார் கொடுக்கக் கூட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வரவில்லை. அந்த வழக்கை கிடப்பில் போட்டது.
இந்நிலையில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பெருமை சேர்க்கும் கைப்பிடி மணல் எடுக்க வீம்பு பேசிய அதிகாரிகள் அவர்கள் சார்ந்துள்ள துறைக்கு தகுதியற்றவர்கள்.
தமிழக அரசு சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் அநாகரிகமாக நடந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் வழிபாடு செய்யவும் பா.ஜ.க. மாநில பொறுப்பாளர் வினோஜ் வி. செல்வம் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய போக்கு காவல்துறையின் அத்துமீறல். இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்துள்ளது சட்டவிரோத நடவடிக்கை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
தி.மு.க. அரசின் இந்து விரோத போக்கு தமிழக மக்களை வெறுப்படை செய்கிறது. மக்களின் ஆதரவை பெற திமுக தலைவர் தேர்தல் நேரத்தில் என்னவெல்லாம் பேசினார்?
இந்துக்களின் உணர்வுகளை மதிப்போம். எல்லோருக்கும் பொதுவாக நடப்போம். எங்கள் கட்சியில் பெரும்பான்மை இந்துக்கள் தான் உள்ளனர். இப்படி பேசி இந்துக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தபின் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை மக்கள் பார்த்துதான் வருகிறார்கள். இதனை தமிழக முதல்வர் திருத்திக்கொள்ள வேண்டும்.
இந்து விரோத, தேச ஒருமைப்பாட்டிற்கு விரோதமாக செயல்பட்ட தமிழக அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.