
கல்வியை சீரழித்து திராவிடக் கொள்கையை திணிக்கும் திராவிட மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவித்துள்ளது பள்ளி கல்வித் துறை. இதனை நடத்த மாவட்ட ஆட்சியர்கள் வற்புறுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த போட்டிகளுக்கான தலைப்புகள் அனைத்தும் திமுக பயிற்சி முகாம்களில் நடத்தப்படும் திராவிட கொள்கையாக இருப்பது பெற்றோரை, கல்வியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பல தலைவர்களின் பிறந்த நாட்கள் பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் அவை அந்த தலைவர்களின் சார்ந்த கட்சியின் கொள்கையாக இல்லாமல் அவர்கள் சமூகத்திற்கு செய்த நற்செயல்களாவும் மாணவ சமுதாயம் மேம்பாடுகள் குறித்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
உதாரணமாக கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் கல்வி தினமாகவும், முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசியர் தினமாகவும் கொண்டாடினாலும் அதில் அரசியல் கலப்போ கொள்கை திணிப்போ இல்லை . ஆனால் திராவிட சிந்தாந்தத்தை நேரடியாக திமுக அரசு திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவ்வாறு செய்வது கண்டனத்திற்கு உரியதாகும். மாணவர்களை அரசின் அடிமைகளாக கருதி இதுபோன்ற நடவடிக்கைகளை திமுக செய்ய துணிகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அவரது தந்தையான கருணாநிதி அவர்களின் நூற்றாண்டில்தான் தொடர்ந்து கவனம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருவது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. தங்களது பரம்பரைக்கு வரலாற்று குறியீடுகளை ஏற்படுத்த முனைகிறது. அதற்காக மாணவர்கள் மூளையில் திராவிட கொள்கையை திணிப்பது ஜனநாயக விரோதமான செயல்.
பள்ளி பாடங்களில் இவர்களது படங்களை பாடங்களை, உண்மைக்கு புறம்பான செய்திகளை வலிய திணித்தே வந்துள்ளன.
திராவிட கழகத் தலைவர் ஈ.வெ.ராவிற்கு தெற்காசிய சாக்கிடீஸ் என யுனெஸ்கோ விருது கொடுத்ததாக இருக்கிறது. இது அப்பட்டமான பொய் என்பது தெரிந்தும் மாணவர்களை அதனை படிக்க வைத்து, தேர்வில் கேள்வி கேட்டு எழுத வைத்து மாணவர்கள் மூளையில் தவறான தகவலை திணிக்கிறது.
இதுபோன்று தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் உள்ள பிழைகளை பட்டியலிட்டு கொடுத்த போதிலும் திருத்துவதற்கு அந்த துறை தயாராக இல்லை.
பொய்யான தகவலைக் கொண்டு விவாதம் நடத்தி மக்களை திசைதிருப்பும் சில ஊடகங்கள் இது குறித்து விவாதிக்க விரும்பவில்லை என்பது குறிப்பித் தக்கது.
எனவே கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு என்ற பெயரில் கருத்து திணிப்பு பாசிச நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். இது பரிசளிப்பு போட்டியாக தனியார் அமைப்புகள் நடத்துவது ஆனாலும் இதனை அனுமதிக்கக்கூடாது என்று இந்து முன்னணி சார்பில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
உடனே போட்டி பற்றிய அறிவிப்பை தமிழக அரசு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதப் படுத்தி மாணவர்களை போராடத் தூண்ட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.