spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்ஆளவந்தார் நிலம் இறைப் பணிக்காக மட்டுமே! ‘கலைஞர்’ பன்னாட்டு அரங்கம் இறைப்பணி அல்ல!

ஆளவந்தார் நிலம் இறைப் பணிக்காக மட்டுமே! ‘கலைஞர்’ பன்னாட்டு அரங்கம் இறைப்பணி அல்ல!

- Advertisement -

ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கமா? உடனடியாக கைவிட வேண்டும்! – என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படவுள்ள 60 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பெரும்பகுதி  ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான  நிலம் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.  இந்த செய்தி உண்மையாக இருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற கண்காட்சி அரங்கம், ஊடக அரங்கங்கள், நட்சத்திர விடுதிகள், ஊர்தி நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன்  பன்னாட்டு அரங்கம் கட்டப்பட வேண்டியது கட்டாயத் தேவை தான்.  ஆனால், அதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் இன்னொரு உன்னத நோக்கத்தை சீர்குலைப்பதாக இருக்கக் கூடாது.  கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்க சென்னையிலும், சென்னைக்கு வெளியிலும் அரசுக்கு சொந்தமாக   ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றில் பன்னாட்டு அரங்கத்தை கட்டுவதை விடுத்து  ஆயிரம்காணி ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கட்டக்கூடாது.

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் வன்னிய குலத்தில் பிறந்த ஆளவந்தார் நாயகர், அவரது கடுமையான உழைப்பால் சேர்த்த 1550 ஏக்கர் நிலங்களை இறைபணிக்காக வழங்கினார்.  அவரது பெயரில் செயல்பட்டு வரும் அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இப்போது 1054 ஏக்கர் நிலம் உள்ளது. ஆளவந்தார் எழுதி வைத்த நிலங்கள், அவரால் குறிப்பிடப்பட்ட இறைபணிக்கான தேவையை விட பல மடங்கு அதிகம் என்பதால், அவற்றை வேறு பணிகளுக்காக பயன்படுத்தலாமா? என்ற வினா எழுந்த போது, அவற்றைக் கல்விப் பணிக்காக பயன்படுத்தலாம்  என்று நீதியரசர் சேஷாத்ரி அய்யர் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கடந்த 1918-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் தீர்ப்பளித்தது. அதற்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது. கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் என்பது இறைபணியோ, கல்விப் பணியோ சார்ந்தது அல்ல. அதற்காக ஆளவந்தார் நிலங்களை  ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது.

சென்னைக்கு வெளியே கிழக்குக் கடற்கரைச் சாலையில் மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலம்  ஆட்சியாளர்கள் உள்ளிட்ட பலரின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகரம்,  564 ஏக்கர்  நிலத்தில்  சூரிய ஒளி மின்திட்டம்,  இன்னும் பல ஏக்கர் பரப்பளவில் தனியார் வீட்டு வசதித் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. அதைக் கண்டித்தும், அத்திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் நாளும், 16-ஆம் நாளும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விரிவான கடிதங்களை எழுதியிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து திரைப்பட நகரம் அமைக்கும் திட்டம்  பூந்தமல்லிக்கு அருகில் மாற்றப்பட்டதாக அறிகிறேன். ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த  பிற திட்டங்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. அதற்கு முன்பாகவே கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்காக 60 ஏக்கர் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக பறிக்க அரசு முயல்வது நியாயமல்ல. இது ஆளவந்தாரின் நோக்கங்களுக்கு எதிரானது. ஆளவந்தார் அறக்கட்டளையையும்,  அது அமைக்கப்பட்டதன் நோக்கத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆளவந்தாரின் நிலங்களை காக்க வேண்டிய அரசே, அவற்றை பறிக்கத் துடிக்கக் கூடாது.

எனவே, முட்டுக்காடு கிராமத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்., சூரிய ஒளி மின்திட்டங்களை செயல்படுத்துதல், வீடுகளைக் கட்டுதல் போன்ற பணிகளுக்காகவும் ஆளவந்தார் நிலங்கள் பயன்படுத்தப்படக் கூடாது. எந்தக் காலத்திலும்,  எதற்காகவும் ஆளவந்தாரின் நிலங்கள், அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதை தவிர்த்து வேறு  எந்தப் பணிகளுக்கும் வழங்கப்படாது என்பதை அரசு பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும்; அதன் மூலம் வன்னிய மக்களிடம் நிலவும் ஐயங்களைப் போக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe