
பழனி முருகன் கோவிலில், பக்தர்களின் செல்போனை பாதுகாக்க அக். 1-ம் தேதி முதல் ரூ.5 கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிலர், மலைக்கோவிலில் உள்ள மிகவும் அரிதான மூலவர் சிலையை (கருவறையை) வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். இதனால் பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு வர தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்தது. இது அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும் என்றது.
இதைத் தொடர்ந்து பழனி மலை கோவிலுக்கு, அக் . 1-ந்தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது. மேலும், பழனி கோவில் சார்பில் அடிவாரம் பாத விநாயகர் கோவில், மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையங்களில் செல்போன்களை பாதுகாக்க ‘ரேக்’ அமைக்கும் பணி தீவிரமாக நடந்து முடிந்தது.
இதை அடுத்து கடந்த வாரம், பழனி முருகன் கோவில் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 1-10-2023 முதல் செல்போன், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரும் பக்தர்கள் தங்களது செல்போன் மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்களை பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில்களான படிப்பாதை, மின் இழுவை ரெயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒரு செல்போனுக்கு தலா ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் பாதுகாப்பு மையங்களில், நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 12 ஆயிரம் செல்போன்களை பக்தர்கள் ஒப்படைத்துள்ளனர். இதன் மூலம் ஒரே நாளில், ரூ.60 ஆயிரம் புதிய வகையில் வசூல் வேட்டை நடந்துள்ளது.
இது குறித்து பழனி முருகன் கோவில் தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியபோது, “பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிவாரம் பாத விநாயகர் கோவில், மின் இழுவை ரயில் நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை கொடுத்துச் சென்றனர். இதற்கு கட்டணமாக ஒரு செல்போனுக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. மேலும், கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்கிறார்களா? என சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் 12,000 செல்போன்களை பாதுகாப்பு மையங்களில் பக்தர்கள் ஒப்படைத்துவிட்டு மீண்டும் வாங்கிச் சென்றனர்” என்றார்.
முன்னர் செருப்பு பாதுகாப்பு கடை ஏலம் போட்டு ஒரு வித வசூல் நடத்தப்பட்டது. இப்போது செல்போன் மூலமாக வசூல் வேட்டையில் அறநிலையத்துறை இறங்கியுள்ளது. இது அறநிலையத்துறை வசம் உள்ள அனைத்துக் கோயில்களிலும் விரிவுபடுத்தப் பட்டுள்ளதால், இந்துக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருப்பதி போன்ற பெரிய தலங்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுகப்பட்டுள்ளன. செருப்புகள் வைக்க தனி கௌண்டர், செல்போன் பாதுகாப்புக்கு தனி ஏற்பாடுகள், காத்திருக்கும் நேரத்தில் உணவு, நீர், பால் இவற்றுடன், தொடர்பு கொள்ள ஏதுவான வசதிகளும் பக்தர்களுக்கு இலவசமாகவே செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கோயில் சொத்துக்களை கபளீகரம் செய்வது, கோயில்களைக் கொள்ளை அடிப்பது, கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து வசூல் வேட்டை நடத்துவது என்ற ஒன்றையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள திராவிட நாத்திக அரசுகள் கையில் ஆலயங்கள் அகப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை தங்களுக்கு சாதகமான ஒன்றாக மாற்றி அமைத்துக் கொண்டு, இப்போது செல்போன் பாதுகாப்பு என்ற வழியிலும் கொள்ளை அடிக்கின்றது.
பழைமையான கோயில்களில் சிலைகள், மண்டபங்கள், உயிரோட்டமான விஷயங்கள் சிதைக்கப்படுவதை பக்தர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்து பொது வெளியில் போட்டு வந்ததால், ஓரளவு பயம் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இருந்தது. இப்போது நீதிமன்றத்தின் புண்ணியத்தில் அதுவும் இல்லாததால், அறநிலையத்துறையினர் அச்சமின்றி கொள்ளை அடிக்க ஏதுவாகிவிட்டது.
செல்போன் பாதுகாப்பு மையங்களிலும் ஒரு செல்போனுக்கு தலா ரூ.5 என்று வசூலிக்கப்படுகிறது. ஒரு பாதுகாப்பு பெட்டகத்துக்கு என்று வசூலிக்கப்படுவதில்லை. ஆறு பேர் கொண்ட ஒரு குழுவாக கோயிலுக்கு வருபவர்கள் என்றால், ஆறு பேரிடமும் இருக்கும் ஆறு செல்போன்களை தனித்தனியாகப் பெற்று ரூ.30 பெற்றுக் கொள்கின்றனர். மேலும் செல்போன்களை வைத்து முறைகேடுகளில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டு என்று பக்தர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டுகின்றனர்.
பழனி கோயில்ல் அமல்படுத்தப் படுவதற்கு முன்னதாகவே பல்வேறு கோயில்களில் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. கோயிலுக்கு வரும் இந்து பக்தர்கள் பெருமளவு பணம் செலவழிக்காமல் தங்கள் வழிபாட்டைச் செய்து கொள்ள முடியாது என்ற நிலைக்கு அறநிலையத்துறை கொண்டு வந்துவிட்டது.
கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் என்பதை சொல்லிச் சொல்லியே, இப்போது அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் திராவிட நாத்திகர்களால், கோயில்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரம் என ஆக்கப்பட்டுள்ளதுதான் திராவிடம் செய்து காட்டிய பெரும் சாதனை!