![](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2024/02/governor-speech.jpg?resize=696%2C392&ssl=1)
பரபரப்பான சூழலில் இன்று காலை கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், திமுக., அரசு தயாரித்துக் கொடுத்த உரை, இந்திய அரசியலமைப்பைக் கேலி செய்வதாக இருக்கிறது என்று கூறி, அதனை சட்டமன்றத்தில் வாசிப்பதைத் தவிர்த்தார் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி.
தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி, பிப்ரவரியில் சட்டசபை கூட்டத் தொடர் ஆளுனர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டு ஆளுனர் ரவி உரையாற்றிய போது, தமிழக அரசால் அச்சிடப்பட்டுக் கொடுத்த உரையில், உண்மைக்கு மாறான பகுதிகள் உள்ளதாகக் கூறி, சில பகுதிகளை விடுத்தும், சிலவற்றை சேர்த்தும் பேசினார் ஆளுநர். ஆனால் அதை எதிர்பார்க்காத ஆளும் தரப்பு, அரசு அச்சிட்டுக் கொடுத்த உரையை மட்டும் சபையில் பதிவு செய்ய, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது. இதற்காக ஒரு தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலினே முன்மொழிய, இதனால் கோபமடைந்த ஆளுனர், சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அப்போது அமைச்சராக இருந்த பொன்முடி, போயா என்று சொல்லி கையால் அருவருப்பான வகையில் சைகை செய்தார். இந்த நிகழ்வுகள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதன் பின் ஆளுநருக்கும் அரசுக்குமான மோதலும் தீவிரமடைந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நிகழ்வுகளால் இந்த ஆண்டு சட்டசபையில் உரையாற்ற, ஆளுனர் அழைக்கப்படுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனினும், வழக்கம்போல சட்டசபை கூட்டம், ஆளுனர் உரையுடன் தொடங்கும் என, சபாநாயகர் அப்பாவு இம்மாதம் 1ஆம் தேதி அறிவித்ததால், அந்த ஐயம் நீங்கியது.
இதை அடுத்து, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்க திட்டமிடப்பட்டது. இது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நேரம் என்பதால், அரசின் சாதனைகளை விளக்கும் ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, உரை நிகழ்த்த எழுந்த ஆளுநர், தாம் கேட்டுக் கொண்ட படி, உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதை செயல்படுத்தாததாலும், உரையில் இந்திய அரசியலமைப்பை கேலி கிண்டல் செய்யும் விதத்தில் வாசகங்கள் இருந்ததாலும் அந்த உரையைப் படிக்க இயலாது என்று, இரு காரணங்களைக் குறிப்பிட்டு, உரையை நிகழ்த்தாமல் புறக்கணித்து அமர்ந்தார். தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காமல் சில நிமிடங்களில் முடித்து கொண்டதை அடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழாக்கி வாசித்தார். அதுவரை முழு நேரமும் ஆளுநர் அவையில் அமர்ந்திருந்தார்.
சட்டசபையில் ஆளுனர் ஆர்.என். ரவி ஆற்ற வேண்டிய உரையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது. தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆளுநர் உரையாற்ற எழுந்த போது,
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே , சட்டமன்ற உறுப்பினர்களே, ஊடக நண்பர்களே , சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் ! (இவ்வாறு தமிழில் பேசிவிட்டு, ஆங்கிலத்தில் தொடர்ந்தார்…) 2024ஆம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு தயாரித்த உரையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் உள்ளதால் நான் இந்த உரையை படிக்க விரும்பவில்லை. நான் ஏற்கெனவே கேட்டுக்கொண்ட போதிலும், உரையைத் தொடங்கும் முன் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும் . அரசு தயாரித்த இந்த உரையை அப்படியே படிப்பது, அரசியல் சாசனத்தை ஏளனம் செய்வது போல் அமையும்!
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
வாழ்க பாரதம், வாழ்க ஜனநாயகம், ஜெய்ஹிந்த், நன்றி
இவ்வாறு ஒரு திருக்குறளையும் கூறிவிட்டு, தனது உரையை முடித்துக் கொண்டு அமர்ந்தார் ஆளுநர்.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் ஆளுனர் உரையில் நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டு ஆளுனர் மாளிகை விளக்கமளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்.9ஆம் தேதி ஆளுனரின் உரை ஆவணம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. அதில் உண்மைக்கு மாறாக தவறான அம்சங்கள் அடங்கிய பல பத்திகள் இருந்தன. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையைக் காட்டவும், ஆளுனர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் அதை இசைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக முன்னதாக முதல்வருக்கும், சபாநாயகருக்கும் ஆளுனர் கடிதம் எழுதியிருந்தார்.
ஆளுனரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். ஆனால், தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு மன்றமாக இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். ஆளுனரின் அறிவுரையை அரசு புறக்கணித்தது.
இன்று காலை 10 மணிக்கு ஆளுனர் ஆற்றிய உரையில், சபாநாயகர், முதல்வர், எம்எல்ஏ.,க்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திருவள்ளுவரின் 738வது குறள் அடங்கிய முதல் பத்தியையும் படித்தார். அதன்பிறகு, அதில் இடம்பெற்ற தவறான கூற்றுகள், உண்மைக்கு மாறான பத்திகள் இடம்பெற்றிருந்ததால் அரசியலமைப்புச் சிறப்புகளைக் கருத்தில் கொண்டு தனது உரையை படிக்க இயலாது என்பதை ஆளுனர் வெளிப்படுத்தினார்.
அதன்பின் சபாநாயகர், உரையின் தமிழாக்கத்தைப் படித்தார். அந்த உரை முடியும் வரை ஆளுனர் அமர்ந்திருந்தார்; சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதத்திற்காக எழுந்தார். இருப்பினும், சபாநாயகர் திட்டமிட்டிருந்த அட்டவணையை பின்பற்றாமல், ஆளுனருக்கு எதிராக அவதூறை பேச துவங்கினார். நாதுராம் கோட்சே மற்றும் பலவற்றை பின்பற்றுபவர் என்றும் பேசினார்.
சபாநாயகர் தனது அநாகரிகமான நடத்தையினால், சபையின் கௌரவத்தையும், சபாநாயகர் நாற்காலியின் கௌரவத்தையும் குறைத்தார். ஆளுனருக்கு எதிராக வசை பாடிய போது, ஆளுனர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்.. என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.