கோவை, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே பேரணியாகச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 1998ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்..
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக திங்கட்கிழமை இன்று மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவைக்கு வந்தார். முன்னதாக, கர்நாடக மாநிலம் ஷிவ்மோகாவில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு தமிழகத்தின் கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறிப் புறப்பட்ட பிரதமர் மோடி, கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகில் இருந்து திறந்த வாகனத்தில் பேரணியாக வந்தார். சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோடி.. மோடி.. என உற்சாகக் குரல் எழுப்பி, பூக்களைத் தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். வழிநெடுக நின்று வரவேற்பு கொடுக்கும் மக்களைப் பார்த்து பிரதமர் மோடி கையசைத்து புன்னகைத்தார். அவ்வப்போது, வாகனத்தில் உடன் வந்த அண்ணாமலையிடம் கூட்டத்தைக் கைகாட்டி விளக்கம் கேட்டு வந்தார். அவருக்கு அண்ணாமலை விளக்கம் அளித்தார். வாகனத்தில் வானதி சீனிவாசன், எல்.முருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சாலையின் இருபுறமும் திரண்ட பாஜக., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி பிரதமரை வரவேற்றனர். தங்கள் கைகளில், மோடியை வரவேற்று பதாகைகளையும் வைத்திருந்தனர். பொய்க்கால் குதிரை ஆடியும், சிறுவர் சிறுமியர் வீணை இசைத்தும் கோவை தெருக்களை ரம்யமாக்கினர். பிரதமர் மோடியை இசைக் கலைஞர்கள், வேத விற்பன்னர்கள் தங்கள் பாணியில் வரவேற்றனர்.
பிரதமர் மோடியை வரவேற்க சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைத்து பாஜக.,வினர் ஏற்பாடு செய்திருந்தனர். சாலையின் இருபுறமும், கூடிய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடியை மலர்தூவி வரவேற்றனர். இந்தப் பேரணி, வடகோவை, டி.பி.ரோடு வழியாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை 2.5 கி.மீ., தொலைவுக்கு நடைபெற்றது. காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இந்தப் பேரணிக்கு கோவை காவல் துறையினர் தடை விதித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பள்ளித் தேர்வுகள் காரணமாக பேரணி நடத்த அனுமதிக்க இயலாது என்று கூறினர். உடனே பாஜக.,வினர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரதமரின் தனிப்படையினர் பார்த்துக் கொள்வார்கள் என்றும், மாலை 5.30க்கு மேல்தான் பேரணி என்பதால், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறி, பேரணிக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு அளிப்பதுதான் போலீஸாரின் கடமை என்று நீதிபதி குறிப்பிட்டார். மேலும், தான் செயல்படுத்திய திட்டங்களைக் கூறி மக்களைச் சந்திக்க பிரதமர் விருப்பப் படுகிறார் என்றால் அதைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்றும் குறிப்பிட்டார். இதை அடுத்து, இன்று பேரணி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் பேரணியை நிறைவு செய்த பிரதமர் மோடி, 1998 கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.அதனை தொடர்ந்து காரில் புறப்பட்டு இரவு 7.15க்கு, கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கச் சென்றார். நாளை கோவையில் இருந்து விமானம் மூலம் பாலக்காட்க்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.