தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது திருநெல்வேலி பாஜக., வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என்று தகவல் பரப்பப்பட்ட நிலையில், அவர் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தன்னை ‘டார்கெட்’ செய்ய ரூ.4 கோடியை களத்தில் இறக்கியிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக ரூ.4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது என்றும், அவர்களது பெயர் சதீஷ், நவீன், பெருமாள் என்று தெரிய வந்ததாகவும், இவர்களில் சதீசும், நவீனும் சகோதரர்கள் என்றும், இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணி செய்து வருவதாகவும், சதீஷ் பாஜக., நிர்வாகி என்றும், பெருமாள் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்றும் கூறப்பட்டது.
இவர்கள் 3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லைத் தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தைக் கொண்டு செல்வதாக கூறினார்களாம். ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லை என்பதால், அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து, நெல்லை நாடாளுமன்றத் தொகுதி பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் பார்வையாளரிடம் திமுக., வழக்கறிஞர் அணியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
நெல்லை மாநகர திமுக., வழக்கறிஞர் அணி தலைவர் ஜாகிர் உசேன் தலைமையிலான வழக்கறிஞர்கள் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சோனாளி பொன்ஷேவயங்கரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டதாக நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். வேட்பாளரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
இதற்கு இரு தினங்களுக்கு முன்னர்தான், திருநெல்வேலி திமுக.,வினர் பணம் பெரிய அளவில் கையாண்டு பிடிபட்டனர், ஆனால் அது குறித்து மாவட்ட நிர்வாகம் ஏதும் தகவல் வெளியிடவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திமுக.,வின் தோல்வி பயம் காரணமாக நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நுழைந்து அச்சுறுத்தி வீட்டில் உள்ள பொருட்களைக் கூட கைப்பற்றி செல்கின்றனர் என்று புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை திமுக., அலுவலகத்தில் எவ்வளவு தொகை பிடிபட்டது? யார் கைது செய்யப்பட்டார்கள்? என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டது? இதை மாவட்ட ஆட்சியர் ஏன் இது வரை முறைப்படி தெரிவிக்கவில்லை!? அதன் காரணம் என்ன ? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதே நேரம், இந்த விவகாரத்தை திசை திருப்பி, பாஜக.,வினரை நெருக்கடிக்கு உள்ளாக்க திமுக., போடும் நாடகமே இந்த 4 கோடி ரூபாய் விவகாரம் என்றும், நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நெல்லையில் பறக்கும் படை ரெய்டு இதன் பின்னணிதான் என்றும் கூறுகின்றார்கள் நெல்லை பாஜக.,வினர்.
இது குறித்து நெல்லை தி.மு.க., ஆபீசில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் என்ற தலைப்பில், நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது, அதன்படி, திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., செயலர் ஆவுடையப்பன் வீடு, மகாராஜ நகரில் உள்ளது. அதே பகுதியில் மாவட்ட தி.மு.க., அலுவலகமும் உள்ளது. நேற்று மாலை கட்சி அலுவலகத்தில், கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கசிந்தது. வருமான வரித்துறையினர் காத்திருந்தனர்.
பணப்பட்டுவாடா துவங்கும் முன் உள்ளே சென்று சோதனை நடத்தினர். அதிகாரிகளை கண்டதும் ஆவுடையப்பன், மைதீன்கான் உள்ளிட்ட கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். ஒரு பையில் இருந்த பணத்தை சாலையில் நின்ற தோழமைக் கட்சி நிர்வாகி ஒருவரின் காரில் தூக்கி போட்டனர். அதை கவனித்த வருமான வரித்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். ஆவுடையப்பன் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். கட்சி அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.
சோதனைக்குப் பின் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த மாவட்டச் செயலர் ஆவுடையப்பன் கட்சியினரிடம், ”தகராறு செய்து விடாதீர்கள். பிறகு செந்தில் பாலாஜி மாதிரி ஆகிவிடும்,” என்றார். – என செய்தி வெளியானது.
இதைக் குறிப்பிடும் பாஜக.,வினர், திமுக., அலுவலகத்தில் பணம் பிடிபட்டும், அன்றே புகார் கொடுக்கப்பட்டும் திமுக., ஆதரவாளர்கள் முக்கிய புள்ளிகள் வீடுகளில் நூற்றுக்கணக்கில் போலீசார் அதிகாரிகள் சென்று நியாயப்படி விசாரணை நடத்தி வீட்டிலுள்ள பொருட்களை அள்ளிச் செல்ல முடியுமா ? நெல்லையில் தோல்வி பயத்தில் தமிழக அரசு அதிகாரிகளை திமுக பகடைக்காயாக பயன்படுத்தி பாஜக தொண்டர்களை மிரட்டுகிறது என்ற கருத்தைத் தெரிவிக்கிறார்கள்.
முன்னதாக, இது குறித்து வெளியான செய்தியின்படி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியலமைப்பான மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் காரில் இருந்து ரூபாய் 28.5 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; திமுக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைப்புகளின் அதிரடி சோதனைகளுக்குப் போட்டியாக தமிழக போலீஸாரை திமுக., பயன்படுத்தி, பாஜக., வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழகம் முழுதும் கடந்த ஒரு வார காலமாக 60 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தி உள்ளது. அதில் 22 கோடி ரூபாய் வரை பிடிபட்டிருக்கிறது. அதேபோல, பறக்கும் படையும் தமிழகம் முழுதும் 82.63 கோடி ரூபாய்க்கான ரொக்கத்தை கைப்பற்றி உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடத்துவர் என்பதால், வருமான வரித் துறையை மத்திய அரசு முழு வேகத்தில் முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக, திமுக.,வினர் தேர்தல் செலவுக்காக அதிக அளவில் பணம் எடுத்துச் செல்வர் என்பதால், வருமான வரித் துறை அவர்களை குறிவைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை, பாஜக., பின்னணியில் இருந்து செய்வதாக திமுக., தரப்பு குற்றம் சாட்டுகிறது.
இப்படிச் செய்வதால், தேர்தல் நடக்கவிருக்கும் பல இடங்களில் பணத்துக்காக திமுக., தடுமாறுவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்க திமுக., தரப்பும் தயாராகி விட்டது. இதற்காகவே, தமிழக போலீசில் உளவுத் துறையினரை முழு வேகத்தில் முடுக்கி விட்டுள்ளது. அதை வைத்து, பறக்கும் படையினரை ஏவி விட்டு, பாஜக., தொடர்புடைய இடங்களில் சோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்படி நடத்தப்பட்ட சோதனைதான் நெல்லை ரயிலில் நடந்த சோதனை என்கின்றனர் பாஜக.,வினர்.
இவ்வாறு, பாஜக., திமுக., இரண்டு தரப்பும் மோதிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் அதிமுக., தரப்பில் தேர்தல் செலவுக்கு பணம் எடுத்துச் செல்வதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்கின்றனர்.