கோவில் கும்பாபிஷேகத்திற்காக அவசர கதியில் அரைகுறையாக திருப்பணிகள் நடைபெறுவது நியாயமா? என்று கேட்டு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு ஸ்தாணுமாலய சுவாமிகள் திருக்கோவிலில் அவசர கதியியில் கும்பாபிஷேக வேலைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வருகின்றன.
தமிழக அரசு அதிக எண்ணிக்கையில் திருப்பணி செய்ததாக கணக்கு காட்டி பெருமை பேச வேண்டும் எனும் நோக்கத்தில் வேலைகளை முறையாகவும், முழுமையாகவும் முடிக்காமல் கோவில்களில் கும்பாபிஷேகத்தை தான்தோன்றி தனமாக நடத்தி வருகின்றது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் இக்கோவிலில் கும்பாபிஷேக வேலைகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் மேல்புறம் உள்ள ஓடுகள் பதிக்கப்பட்டு 40 ஆண்டு காலத்திற்கும் மேலாகிறது. அதில் பல இடங்களில் வெடிப்பு, விரிசல் ஏற்பட்ட நிலையில் 90 ஆயிரம் சதுர அடி கொண்ட மேல் தளத்தில் 20000 கன அடி மட்டுமே தல கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கொடிமரமும் சாய்ந்த நிலையில் உள்ளது.
சில மாதங்களுக்கு முன் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலிலும் இதே போல் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணர் திருக்கோவிலிலும் இதுபோலவே அரைகுறையான வேலைகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அங்குள்ள பக்தர்கள் வேதனையுடன் கூறுகையில் இத்திருக்கோவிலில் பாலாலய வேலைகள் நடைபெற்று மூன்று ஆண்டுகள் ஆகின்றது. கடந்த ஆண்டு பக்தர்கள் சார்பில் கோவிலின் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்ட பின்பே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பல மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்து சமய அறநிலையத்துறை கடந்த வாரம் எந்த வேலையும் முடியாத நிலையில் அவசரகதியில் கும்பாபிஷேக யாகசாலை கொட்டகை கால் நட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இது போல் பல திருக்கோயில்களில் சரிவர வேலைகள் முடிக்காமல் கணக்கு காட்டும் நோக்கத்தோடு இந்து சமய அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றது.
பழனி திருக்கோயில் கும்பாபிஷேக முடிந்த பின்னர் சில இடங்களில் தரமற்ற வேலையால் சிதைவுகள் ஏற்பட்டத்தை சுட்டி காட்டுகிறோம். இவ்வாறு கும்பாபிஷேகத்திற்குப் பிறகு மாற்றம் ஏற்பட்டு சீர்படுத்த நேரிட்டால் மீண்டும் கும்பாபிஷேகம் செய்வதுதான் மரபு.
இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க திருக்கோவில் திருப்பணியை மிகுந்த சிரத்தையுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும்.
கும்பாபிஷேகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய நிகழ்வு. எனவே அந்த அளவு தரமான திருப்பணி செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செய்யும் திருப்பணிகள் அடுத்த நான்கு ஐந்து வருடங்களிலேயே பழுதடைந்து விடும் நிலையிலேயே நடைபெறுகின்றன. இவ்வாறு அரைகுறையாக திருப்பணிகள் செய்து அவசர கதியில் கும்பாபிஷேகம் நடத்துவதால் தங்களது ஊருக்கும் மக்களுக்கும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்று மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கு பக்தர்கள் ஏராளமான நன்கொடைகள் தருகிறார்கள். தெய்வீக காரியம் சிறப்பாக செய்யவே பக்தர்கள் விரும்புகிறார்கள். அரசோ, அறநிலையத் துறையோ எந்த பங்களிப்பையும் தருவதில்லை. ஆனால் திருப்பணி அனுமதி பெறவே லஞ்சம் தரும் அவலநிலை உள்ளதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அங்கீகாரம் பெற்ற ஸ்தபதிகள் தான் இதனை செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. அதன் காரணமாக நன்கொடை அளிக்கும் பக்தர்கள் காணிக்கை கொடுப்பதோடு இருக்க வேண்டியுள்ளது. எனவே திருப்பணி சிறப்பாக நடைபெற இந்து சமய அறநிலையத்துறை முழு பொறுப்பாகும்.
எனவே இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பக்தர்கள் உணர்வை புரிந்து கொண்டு திருப்பணிகள் தரமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆகவே தமிழகம் முழுவதும் கும்பாபிஷேகம் நடைபெறும் அனைத்து கோவில்களிலும் முறையாக அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
அவசரகதியில் தன்னிச்சையாக, தங்கள் பெருமைக்காக திருப்பணிகள் செய்தால் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் பக்தர்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவோம் என்பதையும் தெர்வித்துக் கொள்கிறோம்.