தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
0 முதல் 400 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ.4.60 லிருந்து ரூ.4.80 ஆகவும், 401 முதல் 500 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ. 6.15லிருந்து ரூ.6.45ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் உயர்வு?
0-400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60ல் இருந்து ரூ.4.80 காசுகளாக உயர்வு.
401-500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்வு.
501-600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்வு.
601-800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20ல் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்வு.
801-1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20ல் இருந்து ரூ.10.70 காசுகளாக உயர்வு.
1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் ரூ.11.25ல் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்வு.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்வு.
ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
மாதாந்திர மின்கட்டண கணக்கீட்டு முறையை அமல் செய்க!
தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, கட்டண உயர்வைப் பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ள திமுக அரசு, தற்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மீண்டும் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.
திமுக அரசு, கடந்த 2023 – 2024 ஒரு நிதி ஆண்டில் மட்டுமே, ரூ.65,000 கோடிக்கு, மின்சாரம் வாங்கியிருக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மின் உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், இந்த மின்சாரம் வாங்கிய செலவை, பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ளது. நாடு முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தியைப் பெருக்கப் பல மாநிலங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கையில், மாதம் சுமார் ரூ.5,400 கோடி நிதியை, மின்சாரம் வாங்கச் செலவு செய்திருக்கிறது திமுக. மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான் வழிவகுக்கும். இந்த அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத, முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவின் திராவிட மாடல் அரசு.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஷாக் அடிக்கும் மின் கட்டணம் என்றெல்லாம் பேசி காணொளி வெளியிட்ட முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், தற்போது பொதுமக்களுக்குத் தொடர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். ஆட்சிக்கு வந்தால், மாதாமாதம் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்து விட்டு, மூன்று ஆண்டுகள் கடந்தும், அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறார். மாதாமாதம் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை இல்லாமல், பொதுமக்கள் ஏற்கனவே 50% அதிகமாக மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, மாதாமாதம் மின் கட்டணத்தைக் கணக்கெடுப்போம் என்று சொல்லி, தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தையே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், திமுகவின் நிர்வாகத் தோல்விக்காக, பொதுமக்கள் மீது கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தங்கள் நிர்வாகத் திறனின்மைக்கு, பொதுமக்களைப் பலிகடாவாக்கும் திமுக, உடனடியாக இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தி உள்ளிட்ட மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மாதாந்திர மின் கட்டண நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.
மத்திய அரசின் Revamped Distribution Sector Scheme (RDSS) திட்டத்தில் நிதி பெறவே மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அதே பொய்யை மீண்டும் சொல்கிறது திமுக அரசு.
இது தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து திமுகவின் திசைதிருப்பும் முயற்சியைத் தமிழக மக்களிடம் எடுத்துரைத்தோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக என்ன செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
பொருத்தப்படவேண்டிய ஸ்மார்ட் மீட்டர், DT மீட்டர், Feeder மீட்டர்களின் எண்ணிக்கை: 3,06,82,343 (மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய எண்ணிக்கை)
பொருத்தப்பட்ட மீட்டர்களின் எண்ணிக்கை: 1,30,861 (4%)
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் தனியாரிடம் செய்த மின் கொள்முதல் மதிப்பு.
2021-22: 39,365 கோடி ரூபாய்
2022-23: 50,990 கோடி ரூபாய்
2023-24: 65,000 கோடி ரூபாய்
கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த தனியார் மின் கொள்முதல் மதிப்பு: 1,55,355 கோடி ரூபாய்.
RDSS திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளவேண்டிய எந்த பணிகளையும் திமுக செய்யவில்லை, மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ஒரே மாற்றம், நலிவடைந்த BGR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே.
மக்களின் முதுகில் குத்தி விட்டது திமுக அரசு
மின்சாரக் கட்டணம் ரூ.6000 கோடிக்கு உயர்வு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு – தமிழக மக்களின் முதுகில் குத்தி விட்டது திமுக அரசு – பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.83% அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடிக்கும் கூடுதலான வருவாய் கிடைக்கும். தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தால் எடுக்கப்பட்டது என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது. ஒழுங்குமுறை ஆணையம் என்பது பொம்மை அமைப்பு. தமிழ்நாடு அரசின் கண்ணசைவுக்கு ஏற்ற வகையில் செயல்படும் அமைப்பு. ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வை விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் நாள் அறிவித்திருப்பதிலிருந்தே இதை உணரலாம்.
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது. மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, மின்சார வாரியத்தில் ஊழல் அதிகரிக்கவே வகை செய்யும்.
ஜூலை 1-ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதை சுட்டிக்காட்டி அதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு.
ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய கட்டண உயர்வு ஏழை மக்களையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்.
விடியா திமுக., அரசு – விடியா திமுக., முதல்வர்!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு என் கடும் கண்டனம் !
பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார்
விடியா திமுக முதல்வர்.
மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு?
“சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்” என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய திரு. @mkstalin அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்!
உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்!
மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது,
மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி,
மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.