சுதந்திரத்தை இழிவு செய்வோருக்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்குவதாகவும், தமிழக காவல்துறையினரின் மாண்பு குறைகிறது என்பதை உணருங்கள் என்றும் கூறி, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
நமது 78 வது சுதந்திர தினத்தை கடந்த 15ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடினோம்.
ஆனால் சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அறிவித்து துக்க தினமாக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் கோபால ராமகிருஷ்ணன் என்பவர் முகநூலில் சுதந்திர தினத்தை அருவருக்கத்தக்க வகையில் இழிவுபடுத்தியும், தேச ஒற்றுமைக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை முன்னிறுத்தியும் பதிவிட்டிருந்தார்.
அந்த கொடுஞ்செயலுக்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் வந்த நிலையிலும் காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே மக்கள் மனநிலை அறிந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தார்கள். அதன்பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, வழக்கும் பதியவில்லை. அதுகுறித்து கேட்ட போது “அது அவரின் கருத்து சுதந்திரம்” என்று சொல்கிறார்கள்.
பல்லாயிரம் பேர் ரத்தம் சிந்தி, பல இன்னல்கள் பட்டு போராடிப் பெற்ற சுதந்திரத்தை இழிவுபடுத்துவது எந்த வகையிலும் கருத்து சுதந்திரம் ஆகாது. மேலும் சுதந்திரத்தை இழிவு படுத்த எவருக்கும் கருத்து சுதந்திரம் இல்லை, எனவே மேற்படி த.பெ.தி.க மாவட்ட தலைவர் கோபால ராமகிருஷ்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி பேரியக்கம் கடந்த 21/08/2024 அன்று ஆர்பாட்டம் அறிவித்தது.
ஆனால் தமிழக காவல்துறை ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததுடன் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களை ஆர்பாட்டத்திற்கு செல்லும் வழியிலேயே தடுத்து கைது செய்துள்ளது. அந்த வகையில் தமிழக காவல்துறையின் செயல் ஆங்கிலேய கால அடக்குமுறையை நினைவுபடுத்துகிறது. காவல்துறையின் அக்கிரம செயலுக்கு இந்து முன்னணி பேரியக்கம் கடும் கண்டத்தை பதிவு செய்கிறது.
தமிழகத்தின் ஆட்சியில் இருப்பவர்கள் சுதந்திர தினத்தை துக்க நாளாக அனுசரித்தவர்களின் வழி வந்தவர்கள் என்பதால் அவர்களை மனம் குளிர்விக்க வேண்டி தேசியக் கொடியை முன்னிறுத்தி பயிற்சி பெற்று காவல் பணிக்கு வந்துள்ள காவல்துறையினர் சுதந்திரத்தை இழிவு செய்பவர்களை வேடிக்கை பார்ப்பதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதும் சுதந்திரத்தையும் தேசத்தையும் அவமதிக்கும் செயல்.
ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் வருவார்கள். ஆனால் தேசமும், தேச ஒற்றுமையும், சுதந்திரத்தை பேணிகாப்பதையும் தலையாய கடமையாக கொண்ட காவல்துறை ஆட்சியாளர்களின் முரண்பாடுகளுக்கெல்லாம் முட்டுகொடுத்து தன் கடமையை புறக்கணிக்கக் கூடாது.
சுதந்திரத்தை இழிவு செய்பவனுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம், இழிவு செய்வோரை எதிர்த்து போராடவும் நடவடிக்கை எடுக்க கோரவும் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தேச ஒற்றுமையையும், தேசியத்தையும் பிரதானமாக கருதும் இந்து முன்னணி பேரியக்கம் சுதந்திர தினத்தை இழிவு படுத்துவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இராது.
எனவே சுதந்திர தினத்தை இழிவு செய்த த.பெ.தி,க பிரமுகர் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிந்து கைது செய்யவேண்டும், தவறினால் இந்து முன்னணி பேரியக்கம் தொடர் ஜனநாயக மற்றும் சட்ட போராட்டத்த்தை முன்னெடுக்கும் என்று தெரிவித்துகொள்கிறேன்.