மதுரை ரயில்வே கோட்டத்தில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் இரயில்கள் இயக்க வேண்டும் என்று, பயணிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான மதுரை கோட்டத்தில் தான் அதிக அளவில் சரக்கு ரயில்கள் மூலமும், பயணிகள் ரயில் மூலமும் அதிக வருவாய் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் காலத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பின்பு, அத்தடை விலக்கிக் கொள்ளப்பட்ட போது, சாதாரண பயணிகள் ரயில்களாக இயக்கப்பட்ட வண்டிகள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.
ஆனால், பயணிகள் ரயில்களுக்கான பெட்டிகள் தான் இந்த ரயில்களில் தற்போதும் உள்ளன. இதில் முன் பதிவுக்கான பெட்டிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
மதுரை ரயில்வே கோட்டத்தில் மதுரை முதல் நாகர்கோவில் வரை மின் மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளது. இவ்வழியே ரயில்கள் தாமதமின்றி விரைவாக சென்று வருகின்றன. எனவே, ஏராளமான பயணிகள் ரயில்களில் பாதுகாப்பாகவும் விரைவாகவும் தாங்கள் விரும்பும் ஊர்களுக்கு சென்று வர வேண்டுமென விரும்புகின்றனர்.
ஆனால், இரட்டை ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்ட பின்பும், போதிய ரயில்கள் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்படவில்லையென புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக மதுரையிலிருந்து நெல்லைக்கு செல்ல காலை 11 மணிக்கு பின் பிற்பகல் 2.40 வரை ரயில்கள் இல்லை. இதேபோல், மாலை 6 மணிக்கு பின்பு இரவு 11 மணி வரை எந்த ரயில்களும் நெல்லை செல்வதற்கு இல்லை. இதன் காரணமாக பயணிகள் பலர் மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை உள்ளது.
மேலும், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக செல்வதற்கு பயணிகள் ரயில் சேவை இல்லை. இதேபோல் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கும் போதிய ரயில் வசதி செய்து தரப்படவில்லை.
எனவே, திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் வரை இயங்கும் பயணிகள் ரயிலை கோவில்பட்டி, விருதுநகர் வழியாக மதுரை சந்திப்பு ரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
கொல்லத்திலிருந்து செங்கோட்டை வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயிலை மதுரை வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டுமெனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரையிலிருந்து செங்கோட்டை வரை சென்று வர மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடைக்கு முன்பு 3 முறை இவ்வழியாக பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. தற்போது ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது.
திருவனந்தபுரத்திலிருந்து கொச்சுவேலி, கொல்லம், புனலூர், செங்கோட்டை வழியாக மதுரைக்கு கூடுதலான பயணிகள் ரயில் சேவையையும், இன்டர்செட்டி அல்லது வந்தேபாரத் ரயிலை இவ்வழித்தடத்தில் இயக்கிட வேண்டுமெனவும் தென் மாவட்ட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
புதிய ரயில்கள் :
இராமேஸ்வரம், பரமக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், இராஜபாளையம், தென்காசி வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் வகையில் புதிய ரயில் ஒன்றை இயக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
ரமணமகரிஷி அவதரித்த இடம் திருச்சுழியாகும். எனவே, விருதுநகர்-மானாமதுரை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் திருச்சுழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். அங்கு டிக்கெட் முன் பதிவு மையம் ஏற்படுத்த வேண்டுமெனவும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீட்டிப்பு செய்ய வேண்டிய ரயில்கள் :
திண்டுக்கல் முதல் மதுரை வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
இதேபோல் கோயம்புத்தூரிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் இன்டர்செட்டி ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.
திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.
நாகர்கோவில் முதல் நெல்லை வரை இயங்கும் அனைத்து ரயில்களையும் மதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
மதுரை-போடி நாயக்கனூர் வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்தி வேண்டும்.
நெல்லை-மேட்டுப்பாளையம், சென்னை-செங்கோட்டை வரை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ், செங்கோட்டையிலிருந்து விருதுநகர், மானாமதுரை, திருச்சி வழியாக செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளம்-வேளாங்கன்னி ரயில் ஆகியவற்றை தினசரி ரயில்களாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் ரயில் பயணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.