— கிருஷ்ணா ராமலிங்கம் —
சில நிமிடங்கள் அந்த 39 வருஷ கவிதைக்கு மரணம் முற்றுப்புள்ளி வைத்தது.
ஒரு யுக எரிமலை எப்படி அணைந்ததோ? ஒரு ஞானக்கடல் எப்படித் தான் வற்றியதோ? இன்று அமரர் சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 123வது நினைவு தினம்.
பாரதியார் பாடிய கோமதி மஹிமை பாடலில் சங்கரன்கோவில் தல புராணம் மற்றும் அதன் பெருமையை போற்றிப் பாடியுள்ளார். ஆயினும், எட்டாவது பாடலின் கடைசி சில வரிகளுடன் முற்றுப் பெறாமலேயே அப்பாடல் நின்று விட்டது.
நான் எப்பொழுது சங்கரன் கோவில் சென்றாலும் இந்தப் பாடல் ஏன் முற்றுப் பெறாமல் போயிற்று என்று பல முறை யோசித்துள்ளேன். “அளவிடற்கரியது கோமதி மஹிமை என்பதாலோ என்னவோ அது முற்றுப்பெறவில்லை”.
முன்பு கோமதி அம்மன் சந்நிதி செல்லும் வழியில் இந்த கவிதையை எழுதி வைத்து இருந்தார்கள்… பார்த்ததுண்டு, பதினைந்து வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரம் (02.09.2024) சங்கரன் கோவில் சென்ற போது கவிதையினை தேடினேன், காணவில்லை ஒரு வேளை கோவில் கும்பாபிஷேகம் கொஞ்ச நாட்கள் முன்பு நடந்து முடிந்தது, அதில் எங்காவது வைத்து இருக்கலாமோ என்னவோ….
கோமதிமஹிமை
முற்றுப் பெறாத பாரதியாரின் வரிகள்…
தாருக வனத்தினிலே – சிவன் சரணநன் மலரிடை யுளம்பதித்துச்
சீருறத் தவம்புரிவார் – பர சிவன்புக ழமுதினை யருந்திடுவார்
பேருயர் முனிவர்முன்னே – கல்விப் பெருங்கடல் பருகிய சூதனென்பான்
தேருமெய்ஞ் ஞானத்தினால் – உயர் சிவனிகர் முனிவரன் செப்புகின்றான். (1)
வாழிய, முனிவர்களே, – புகழ் வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே.
ஊழியைச் சமைத்தபிரான், – இந்த உலக மெலாமுருக் கொண்டபிரான்,
ஏழிரு புவனத்திலும் – என்றும்
இயல்பெறும் உயிர்களுக் குயிராவான்,
ஆழுநல் லறிவாவான் – ஓளி
யறிவினைக் கடந்தமெய்ப் பொருளாவான். (2)
தேவர்க் கெலாந்தேவன், – உயர்
சிவபெருமான் பண்டொர் காலத்திலே காவலி னுலகளிக்கும் – அந்தக் கண்ணனுந் தானுமிங் கோருருவாய் ஆவலொ டருந்தவங்கள் – பல ஆற்றிய நாகர்க ளிருவர்முன்னே
மேவிநின் றருள்புரிந்தான் – அந்த வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்.
(3)
கேளிர் முனிவர்களே, – இந்தக் கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே, வேள்விகள் கோடி செய்தால் – சதுர்வேதங்கள் ஆயிரம் முறை படித்தால் மூளுநற் புண்ணியந்தான் – வந்து மொய்த்திடும் சிவனியல் விளங்கிநிற்கும்;
நாளுநற் செல்வங்கள் – பல நணுகிடும்; சரதமெய் வாழ்வுண்டாம். (4)
இக்கதை யுரைத்திடுவேன், – உளம் இன்பறக் கேட்பீர், முனிவர்களே!
நக்கபி ரானருளால் – இங்கு நடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்;
தொக்கன அண்டங்கள் – வளர் தொகைபல கோடிபல் கோடிகளாம்! இக்கணக் கெவரறிவார்? புவி
எத்தனை யுளதென்ப தியாரறிவார்? (5)
நக்கபி ரானறிவான்; மற்று நானறியேன், பிற நராறியார்;
தொக்க பேரண்டங்கள் – கொண்ட தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற தக்கபல் சாத்திரங்கள்; – ஓளி
தருகின்ற வானமொர் கடல்போலாம்;
அக்கட லதனுக்கே – எங்கும்
அக்கரை யிக்கரை யொன்றில்லையாம்.
(6)
இக்கட லதனகத்தே – அங்கங்
கிடையிடை தோன்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள் – திசைத் தூவெளி யதனிடை விரைந்தோடும்.
மிக்கதொர் வியப்புடைத்தாம் – இந்த வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்;
மெய்க்கலை முனிவர்களே; – இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி; – கண்டீர். (7)
- எல்லையுண்டேர் இலையோ – இங் கியாவர் கண்டார்திசை வெளியினுக்கே?
சொல்லுமொர் வரம்பிட்டால் – அதை….
முண்டாசு கவிஞரின் பார்வையில் ரௌத்திரம்…..?
தனக்கும், கண் முன்னே பிறர்க்கும் இழைக்கப்படும் கொடுமையை
கண்டும் எழாதிருப்பவன் பேடி.
எதிர்க்கும் துணிவின்றி தன்னுள்ளே உழன்று தன்னைத்தானே அழித்துக் கொள்ளச் செய்வது ஆத்திரம்…சினம்.
அநீதியைக் காணும்பால் பொங்கி எழுந்து தட்டிக் கேட்பதே ரௌத்திரம்!!
ஆத்திரம் அறிவற்றது, விவேகத்துடன் கூடிய அழுத்தமான வெளிப்பாடே ரௌத்திரம் !!
ரௌத்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் உயிரணுவிலும் இருக்கவேண்டும்
“சிதையா நெஞ்சுகொள்
செய்வது துணிந்து செய்
தீயோர்க் கஞ்சேல்
தொன்மைக் கஞ்சேல்
நேர்படப் பேசு
கொடுமையை எதிர்த்து நில்
சாவதற்க் கஞ்சேல்
நையப் புடை
நொந்தது சாகும்
பேய்களுக் கஞ்சேல்
போர்த்தொழில் பழகு.”
இவையெல்லாம் கைவர வேண்டுமா …?
ரௌத்திரம் பழகு !! ” என்கிறான் பாரதி.
“ஆடுவோமோ– பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று” என இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே சுதந்திரம் அடைந்ததாக ஆனந்தமாக பாடிய தேசியக் கவிஞர் பாரதியார். தென் தமிழ்நாட்டில் சித்திரபாநு கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் (1882 டிசம்பர் 11) தோன்றிய அந்த சித்த புருஷர், திருவல்லிக்கேணியில் துன்மதி வருஷம் ஆவணி மாதம் 27ஆம் தேதி (1921 செப்டம்பர் 12) ஞாயிறன்று அதிகாலை 1.30 மணிக்கு புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 கூட நிரம்பவில்லை. சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன. அவர் மறைந்தாலும், அவரது கவிதைகள் இன்றைக்கும் நமக்கு தேசபக்தியை ஊட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இன்று மட்டுமல்ல தமிழ் இருக்கும் வரை பாரதியாரின் புகழும், அவரது கவிதைகளும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்,
அதனாலே மரணம் பொய்யாம். (மஹாகவி பாரதி)
வாழ்க நீர் எம்மான்….