- சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து
- ஐந்து அறைகள் தரைமட்டம்
- 5 மணி நேரம் வெடித்த பட்டாசுகளால் பரபரப்பு
- சாத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் சேர்ந்த கந்தசாமி(50) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை நாக்பூர் உரிமம் பெற்று சாத்தூர் அருகே கீழஒட்டம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 48-க்கும் மேற்பட்ட அறைகளில் 80-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பட்டாசு ஆலையில் தீபாவளிக்கு தேவையான சிறிய ரகம் முதல் உயர் ரகம் வரை ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு ஆலையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 6.45 மணியளவில் இந்த பட்டாசு ஆலையில் ஒரு அறையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி சத்தம் மற்றும் அதிர்வு சாத்தூர், சிவகாசி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை உள்ளிட்ட 30 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
இதையடுத்து தகவலறிந்த சாத்தூர்,சிவகாசி,வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள்,பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் பட்டாசு ஆலைக்கு விரைந்தனர்.ஆனால் பட்டாசுகள் தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துக் கொண்டிருந்ததால் தீயணைப்பதிலும்,மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டது.
சுமார் 5 மணி நேரத்திற்கு பின்னர் தீயணைப்புத் தண்ணீரை ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள ஐந்து அறைகள் தரைமட்டமாகின. மேலும் 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதம் அடைந்துள்ளனர்.
இந்த வெடிவிபத்து அதிகாலை நேரம் ஏற்பட்டதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இதுவரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வெடி விபத்தில் வெடித்து சிதறிய கற்கள் பட்டாசு ஆலை அருகே உள்ள கீழஒட்டம்பட்டி காலணி பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகள்,மேற்கூரை,வீட்டின் கதவு சுவர்கள் விரிசல் உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ளன.
இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பட்டாசு மீட்பு பணிகள் முடிந்த பின்னர் வீடுகள் சேதம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலையின் முன்பாக செல்லும் சாலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிாகரிகளிடம் பாதிக்கபட்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாரிள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர்.மேலும் இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸார் ஆலை உரியமையாளர் கந்தசாமி, மேலாளர் சரவணன் மற்றும் பேர்மென் ஆகிய மூவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலாளர் சரவணனை மட்டும் கைது செய்துள்ளனர்.